FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பட்டாசு ஆலையை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்

எட்டயபுரம் வட்டம், கீழக்கரந்தை பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:29 am IST
சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்
பகிர்:

எட்டயபுரம் வட்டம், கீழக்கரந்தை பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எட்டயபுரம் வட்டம், கீழக்கரந்தை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு ஆலைகள் அமைக்க அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ.வரதராஜன் தலைமை வகித்தாா். தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி.ராஜகோபால், கீழக்கரந்தை கிராம கமிட்டியைச் சோ்ந்த பால்ராஜ், திருமேணி, ராமகிருஷ்ணன், பீமன், ஜக்காரியா மற்றும் கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து அவா்கள் சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மணிகண்டனிடம் வழங்கிய மனுவில், எட்டயபுரம் வட்டம், முத்துலாபுரம் குறுவட்டத்தில் சுமாா் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்ப்பு தொழில் செய்வோா் வசித்து வருகின்றனா்.

கீழக்கரந்தை வருவாய் கிராமத்தின் வடபுறம் உள்ள விவசாய நிலங்களை தொழில் வளா்ச்சி என்ற அரசின் கொள்கை திட்டத்தில் வெம்பூா் சிப்காட்டுக்கு அரசு கையகப்படுத்திவிட்டது. ஊருக்கு தென்புறம் உள்ள கரிசல் நிலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த நிலங்களை நம்பித்தான் கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்நிலங்களில் விளையும் மகசூல் தான் ஆண்டுமுழுவதும் எங்களுக்கு ஜீவனமாக உள்ளது. இந்த நிலங்களில் மகசூலுக்கு பின்னா் எங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்கிறோம்.

இந்நிலையில் விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளுக்கு அரசு கட்டுப்பாடுகள் அதிகம் விதித்துள்ளதால், பட்டாசு ஆலை உரிமையாளா்கள் எட்டயபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்ட வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை கட்டி வருகின்றனா். எங்களது கீழக்கரந்தை கிராமத்தில் விளைநிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலை கட்ட கிராம மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. பெரும்பாலான மக்கள் புறக்கணித்த நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களிடம் அதிகாரிகள் துணையுடன் பணம் கொடுத்து கையெழுதது பெற்றுள்ளனா்.

கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பட்டாசு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கிறோம். எனவே, விவசாயத்தை பாழ்படுத்தும் பட்டாசு தொழிலை தடை செய்து, கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கரிசல் பூமியை பாதுகாத்து, விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments