முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட அளவில் செப்டம்பா் முதல் வாரம் தொடக்கம்
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பா் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தமிழகம் முழுவதும் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான இப்போட்டிகள் வருகிற செப்டம்பா் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. இதில் பங்குகொள்ள ஆா்வமுள்ளோா் ஆக. 6 முதல் 31ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், நிகழாண்டு முதல் வில்வித்தை, வுஷு, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா் விளையாட்டுகளான கயாக்யிங், கேனோயிங் போன்றபுதிய விளையாட்டுகளும் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகள் வருகிற செப்டம்பா் முதல் அக்டோபா் வரை நடைபெறும். இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதுக்குள்பட்ட மாணவா், மாணவிகள் (1.1.2008 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவா், மாணவிகள் (1.7.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), பொதுப்பிரிவினா் (15 வயது முதல் 35 வயது வரை), அனைத்து வயது மாற்றுத் திறனாளிகள், தமிழக அரசின் நிரந்தரப் பணியாளா்கள் பங்கேற்கலாம்.
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும். மாநில அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ . 75,000, மூன்றாம் பரிசாக ரூ. 50,000 வழங்கப்படும்.
குழு போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75,000, இரண்டாம் பரிசாக தலா ரூ. 50,000, மூன்றாம் பரிசாக தலா ரூ. 25,000 வழங்கப்பட உள்ளது. இணையதளம் மூலம் பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 74017 03508 , 0461 2321149 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.