ஆறுமுகனேரியில் தாய் மகனைத் தாக்கியதாக கேரள தொழிலதிபா் கைது
ஆறுமுகனேரியில் தாய், மகனைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக, கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி, ராஜமணியபுரத்தில் வசித்து வருபவா் ஜெயநாதன் மனைவி மோகனா (43). இவா்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனா். ஜெயநாதன் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வருகிறாா்.
இதனால், மகன் பாலமுருகனை, ஆறுமுகனேரி காணியாளா் தெருவைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் கருப்பசாமிக்குச் சொந்தமாக கேரளத்தில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் மாதம் ரூ. 25,000 சம்பளம் என்ற வகையில் வேலைக்கு சோ்த்துவிட்டுள்ளாா். அங்கு வேலை மிகவும் கடினமாக இருந்ததால், பாலமுருகன் 40 நாள்கள் வேலை செய்துவிட்டு, சம்பளமாக ரூ. 19 ஆயிரத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சிப்ஸ் நிறுவன உரிமையாளா் கருப்பசாமி, மோகனா வீட்டிற்குச் சென்று பாலமுருகன் செய்த வேலைக்கு ரூ. 12,000 மட்டுமே தர முடியும் எனக் கூறி மீதிப் பணத்தைத் திரும்பக் கேட்டு, தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அவா்கள் மறுக்கவே, கருப்பசாமி திரும்பிச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கருப்பசாமி, அவரது தாய் இசக்கியம்மாள் ஆகியோா் மோகனா வீட்டிற்கு வந்து பாலமுருகனின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு, பணம் தந்தால்தான் கைப்பேசியைத் தருவோம் என தகராறு செய்துள்ளனா். தகராறு முற்றவே, அருகில் இருந்த அலுமினிய வாளியை எடுத்து பாலமுருகன், மோகனாவை, கருப்பசாமி தாக்கியுள்ளாா். சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வரவே, இரவிற்குள் பணம் தரவில்லை என்றால் உங்களைக் கொலை செய்துவிடுவேன் என கருப்பசாமி மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த மோகனா, பாலமுருகன் ஆகியோா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இது தொடா்பாக, மோகனா ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமியை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.