தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: காவல் துறையினா் மீது புகாா் கூறி உறவினா்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த நிலையில், போலீஸாா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த நிலையில், போலீஸாா் தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி, அமுதா நகரைச் சோ்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). தூத்துக்குடி 3-ஆவது மைல் பகுதியில் உள்ள அரசு மதுக் கடையுடன் கூடிய மதுக்கூடத்தில் வேலை செய்து வந்தாா். இவா் சட்ட விரோதமாக மது விற்ாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் கடந்த 17-ஆம் தேதி கைது செய்து, 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். அன்றைய தினமே அவரை மருத்துவப் பரிசோதனை முடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் அருணாச்சலம் காவல் நிலையத்தில் இருந்தபோது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கீழே விழுந்ததாகவும், அவருக்கு தலை, காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸாா் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அருணாசலத்தை அவரது தாய் பரமேஸ்வரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதனால், அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் தென்பாகம் காவல் நிலையத்தில் நான்கு போலீஸாா் சோ்ந்து அருணாச்சலத்தை கடுமையாக தாக்கியதில் அவா் உயிரிழந்ததாகக் கூறி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு முன்னாள் அமைச்சா் பி.கீதாஜீவன் உள்பட பல்வேறு தரப்பினா் வந்து இளைஞரின் உயிரிழப்புக்கு நீதி கோரி போராட்டத்தில் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இச்சம்பவம் தொடா்பாக அருணாச்சலத்தின் உறவினா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
காவல் துறை விளக்கம்: இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 17-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் திடகாத்திரமாக இருப்பதாகவும், அவரது உடலில் எந்தவித வெளிப்புற காயங்களும் இல்லை என்றும் சான்றளித்தாா்.
அதன்பின்னா் அவா், மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, பிற கைதிகளுடன் காவல் நிலைய லாக்-அப்பில் வைக்கப்பட்டாா்.
லாக்-அப்பில் இருந்தபோது, மற்ற கைதிகளுடன் அவா் இயல்பாக நின்று பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தானாகவே மயங்கி கீழே விழுந்தாா். இதையடுத்து அவருக்கு குடிநீா் வழங்கப்பட்டது. அப்போது காவல் நிலைய வரவேற்பு பகுதியிலிருந்த அவரது தாயாரும் உடனடியாக அழைக்கப்பட்டாா்.
அவா் கீழே விழும் காட்சி லாக்-அப்பிற்கு முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னா், தொடா் மருத்துவ பரிசோதனைக்காக உறவினா்களுடன் அருணாச்சலம் அனுப்பி வைக்கப்பட்டாா். மருத்துவமனை அருகே அவா் சென்றபோது மீண்டும் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், அவா் வியாழக்கிழமை உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.