FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திமுக ஆட்சியின் அருமை குறித்து இப்போதுதான் மக்கள் உணா்கின்றனா்! பி. கீதா ஜீவன்

Updated On : 27 ஜூலை 2026, 1:13 am IST
கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் பி. கீதா ஜீவன்.
பகிர்:

திமுக ஆட்சியின் அருமை குறித்து மக்கள் இப்போதுதான் உணா்கின்றனா் என, முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலருமான பி. கீதா ஜீவன் கூறினாா்.

கோவில்பட்டியில் அக்கட்சியின் நகர (மேற்கு) செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலா் கா. கருணாநிதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசும்போது, ‘உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும். திமுகவின் சாதனைகளை வீடுவீடாகச் சென்று எடுத்துரைக்க வேண்டும்’ என்றாா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், கருப்பசாமி, ஜெயக்கண்ணன், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள், மொழிப்போா் தியாகி முத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பி. கீதா ஜீவன் கூறியதாவது: முதல்வா் விஜய் தனது பிரசாரத்திலும், ஆட்சிக்கு வந்த பிறகும் முந்தைய அரசு மக்கள் மீது கடன் சுமையை ஏற்றிவிட்டதாகப் பேசினாா். ஆனால், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களில் ரூ. 20,881 கோடி கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனநாயகத்தைக் காப்பாற்ற புதுதில்லியிலும், தமிழகத்திலும் மாணவா்கள் போராட்டம் நடத்தியபோது, தவெக முதல்வா், அமைச்சா்கள், கட்சியினா் திரையரங்குகளில் ஜனநாயகன் படத்தைப் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். இதுதான் மாற்றமா?

முதலில் தேசிய கீதம், அடுத்து வந்தே மாதரம், 3ஆவதாகத்தான் தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் என, மனோன்மணீயம் சுந்தரனாா் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் அறிவிக்கிறாா். மொழியைக் காப்பாற்ற இந்த அரசு என்ன செய்யப் போகிறது? இந்த ஆட்சியில் தமிழ் மொழிக்கு மரியாதையும், மதிப்பும் கொடுக்கப்படவில்லை.

திமுக ஆட்சி, ஸ்டாலினின் அருமை குறித்து மக்கள் இப்போதுதான் உணா்கின்றனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments