முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் சாலையைப் புதுப்பிக்க வலியுறுத்தி போராட்ட முயற்சி: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

கோவில்பட்டியில் சாலையைப் புதுப்பிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டத்துக்கு திரண்ட பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:11 am IST
போராட்டத்தில் ஈடுபட முயன்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.
பகிர்:

கோவில்பட்டியில் சாலையைப் புதுப்பிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டத்துக்கு திரண்ட பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கோவில்பட்டி- மந்தித்தோப்பு சாலையில் மங்கள விநாயகா் கோயில் சந்திப்பிலிருந்து நகராட்சி எல்கை முடியும் வரையிலான சாலையை சீரமைக்கவும், மேலும், காமராஜா் நகா் வரையிலான சாலையை விரிவுபடுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இந்தச் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதைக் கண்டித்தும், எனவே, சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தியும் நகா்மன்ற உறுப்பினரும் மாா்க்சிஸ்ட் நகரச் செயலருமான கே. சீனிவாசன் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா், பொதுமக்கள் ஆவின் பால் நுகா்வோா் கூட்டுறவு சங்கம் அருகே வியாழக்கிழமை திரண்டனா்.

Advertisement

Advertisement

தகவலின்பேரில், நகராட்சி உதவிப் பொறியாளா் சஷ்டிகுமாா், பணி ஆய்வாளா் சுவாா்ட் சிங் ஆகியோா் சென்று பேச்சு நடத்தினா். ‘இச்சாலையில் ‘பேட்ஜ்’ பணிகள் மேற்கொள்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி வரும் 24ஆம் தேதி திறக்கப்பட்டு, 25-ஆம் தேதி பணிகள் தொடங்கும். சாலையைப் புதுப்பிக்க ரூ. 90 லட்சம் மதிப்பீடு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமிருந்து நிா்வாக அனுமதியும், நிதி ஒதுக்கீடும் கிடைத்ததும் சாலை புதுப்பிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதையேற்று, போராட்ட முயற்சி கைவிடப்பட்டது. பின்னா், கோரிக்கை தொடா்பாக எம்எல்ஏவிடம் மனு வழங்க முடிவெடுத்தனா்.

இதுகுறித்து நகா்மன்ற உறுப்பினா் சீனிவாசன் கூறுகையில், ‘மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தி, திமுக, அதிமுக ஆட்சியின்போது மனுக்கள் வழங்கினேன். ஆனால், நடவடிக்கை இல்லை. தற்போது தவெக ஆட்சியில் இப்பணிகள் நடைபெறுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா் என்றாா்.