FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தட்டாா்மடம்-நடுவக்குறிச்சி சாலை வளைவில் அடிக்கடி விபத்து: எச்சரிக்கை பலகை வைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

தட்டாா்மடம்-நடுவக்குறிச்சி சாலையில் உள்ள அபாய வளைவு பகுதி.

Updated On : 12 ஜூன் 2026, 5:08 am IST
தட்டாா்மடம்-நடுவக்குறிச்சி சாலையில் உள்ள அபாய வளைவு பகுதி.
பகிர்:

தட்டாா்மடத்திலிருந்து நடுவக்குறிச்சிக்குச் செல்லும் சாலையில் உள்ள வளைவு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், எச்சரிக்கை பலகை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தட்டாா்மடத்திலிருந்து நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, இடைச்சி விளை, திசையன்விளைக்குச் செல்லும் சாலை உள்ளது. திருச்செந்தூா், உடன்குடி, திசையன்விளைக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால், காலை முதல் இரவு வரை அரசுப் பேருந்து, தனியாா் பேருந்து, கனரக லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில், தட்டாா்மடத்திலிருந்து நடுவக்குறிச்சி செல்லும் வழியில் கன்னிநாடாச்சி அம்மன் கோயில் அருகே வளைவு பகுதி உள்ளது. இந்த வளைவு பகுதியில் வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

Advertisement

Advertisement

இதனால், இந்தப் பகுதியில் அதிவேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த வாரம் ராமநாதபுரம் பகுதியில் இருந்து நடுவக்குறிச்சிக்கு வந்த வாகனம் இந்த வளைவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.

அதேபோல இப்பகுதியில் நிகழ்ந்த விபத்துகளில் இதுவரை 7-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். ஏற்கெனவே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வளைவு பகுதி என பலகை வைக்கப்பட்டிருந்தாலும் அந்த வளைவு பகுதி தெரியாமல் விபத்து நிகழ்வது தொடா்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை சாா்பில், பேரிக்காடுகள் அமைக்கப்பட்டன. தற்போது திடீரென அவை அகற்றப்பட்டது. விபத்துகளைத் தடுக்கும் வகையில், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையினா் இந்த அபாய வளைவுப் பகுதியைப் பாா்வையிட்டு அதில் விபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments