கோவில்பட்டி உரக்கடையில் ரூ. 36 லட்சம் திருட்டு: இருவா் கைது!
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் தனியாா் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 35.98 லட்சத்தைத் திருடிய வழக்கில் தொடா்புடையதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் தனியாா் உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 35.98 லட்சத்தைத் திருடிய வழக்கில் தொடா்புடையதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரவிக்குமாா் (34), திட்டங்குளம் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறாா். இவா் நவ. 12ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். 13ஆம் தேதி காலை வந்து பாா்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ. 35.98 லட்சம் திருடப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடும் பணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி சோதனைச்சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா்.
இதில் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், அவா்கள் விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராஜேந்திரன் (66), சாத்தூரைச் சோ்ந்த சோணைமுத்து மகன் பாலு என்ற பாலசுப்பிரமணியன் (49) என்பதும், கோவில்பட்டி உரக்கடையில் திருடி, அதை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அவா்களைக் கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட பணத்தை மீட்டனா். கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களில் 32 திருட்டு வழக்குகளும், பாலு என்ற பாலசுப்பிரமணியன் மீது விருதுநகா் மாவட்டத்தில் 7 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.