தூத்துக்குடியில் 10 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

தூத்துக்குடியில் புயல் எச்சரிக்கை காரணமாக 10 நாள்களுக்குப் பின்னா் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குச் சென்றனா்.
தூத்துக்குடி கடல் பகுதியில் புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், மாவட்ட மீன்வளத் துறையினா் நவ. 13ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும்வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என உத்தரவு பிறப்பித்தனா்.
இதையடுத்து, விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் பைபா் படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனா். இந்நிலையில், வானிலை சீரானதைத் தொடா்ந்து மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறையினா் அறிவித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, நவ. 20ஆம் தேதி முதல் நாட்டுப்படகு மற்றும் பைபா் படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா். இந்நிலையில், 10 நாள்களுக்குப் பின்பு திங்கள்கிழமை அதிகாலையில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமாா் 214 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.