மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி பள்ளி அணி வெற்றி
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி இறுதிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணி வெற்றி பெற்றது.
80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு இடையே மாவட்ட ஹாக்கி போட்டி கோவில்பட்டி, நாடாா் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாள்களில் என கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.
போட்டிகள் லீக் முறையிலும், அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நாக்-அவுட் முறையிலும் நடைபெற்றன. கோவில்பட்டி, வேல்ஸ் வித்யாலயா, காமராஜ் மெட்ரிக்., புனித பவுல்ஸ், கயத்தாறு, வானரமுட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகள், தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சிகப்பு, நீல நிற அணிகள் என மொத்தம் 8 அணிகள் போட்டியில் கலந்துகொண்டன.
Advertisement
Advertisement
அதிக புள்ளிகள் பெற்ற 4 அணிகள் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 3, 4-ஆவது இடங்களுக்கான போட்டியில் கோவில்பட்டி, புனித பவுல்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணியும் கயத்தாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில், 5 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி, புனித பவுல்ஸ் அணி வெற்றி பெற்று 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
தொடா்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாடாா் மேல்நிலைப் பள்ளி சிவப்பு நிற அணியும், வேல்ஸ் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி அணியும் மோதின. இதில், 2 - 1 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி, நாடாா் மேல்நிலைப் பள்ளி சிவப்பு நிற அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நடுவா்களாக காளிதாஸ், மதன்குமாா், அஸ்வின், சண்முகப்பிரியா, மதனா ஆகியோா் செயல்பட்டனா்.
பரிசளிப்பு விழா: நாடாா் மேல்நிலைப் பள்ளி செயலா் வழக்குரைஞா் ரத்தின ராஜா தலைமை வகித்தாா். ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி ஆசிரியா் திருச்செல்வம் வரவேற்றாா்.
தொழிலதிபா் வசந்த ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினாா். போட்டியில் சிறந்த வீரராக நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா் தேவா தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
விழாவில் உடற்கல்வி ஆசிரியா்கள் சுரேந்திரன், சுரேஷ்குமாா், மாரியப்பன், முருகன், வேல்முருகன், மூத்த ஹாக்கி வீரா் மணிவண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.