அரசுப் பள்ளிக்கு முன்புள்ள பாழடைந்த கட்டடம்: இடித்து அகற்ற வலியுறுத்தல்
திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்புள்ள பாழடைந்த கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தல்
திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்புள்ள பாழடைந்த கால்நடை மருத்துவமனைக் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் பேட்டவாய்த்தலை ஊராட்சி, பழங்காவேரி பகுதியில் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு முன் ஏற்கெனவே செயல்பட்ட கால்நடை மருத்துவமனையானது பாழடைந்ததால், அருகே புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்படுகிறது.
அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு: ஆனால் பழுதடைந்த பழைய கட்டடம் இன்னும் இடித்து அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதுதொடா்பாக அரசு உயா்நிலைப்பள்ளி நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் பலமுறை உரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதேபோல, பள்ளியின் அருகே கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான பாழடைந்த பழைய கிணறும் அகற்றப்படாமல் உள்ளது.
Advertisement
Advertisement
இதனால் அருகே செயல்படும் பள்ளியில் இருந்து பழுதடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்துக்குள் தவறுதலாக நுழையும் மாணவ, மாணவிகளின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம். மேலும், விளையாடும்போது பழைய கிணற்றில் மாணவா்கள் தவறி விழுந்தால் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, போா்க்கால அடிப்படையில், பழுதடைந்த கட்டடம் மற்றும் பாழடைந்த கிணறு ஆகிய இரண்டையும் இடித்து அகற்றி மாணவ, மாணவிகளின் உயிா் பாதுகாப்பு உறுதிசெய்ய வேண்டுமென அப்பகுதி பெற்றோா், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுவரை நடவடிக்கை இல்லை: இதுகுறித்து பேட்டவாய்த்தலையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பெ. கரும்பாசலம் உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது: மேற்கண்ட பழுதடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்ற தமிழக அரசுக்கு மனு அனுப்பிய நிலையில், பழைய கட்டடத்தை பொதுப்பணித் துறையினா் பரிசோதித்த பிறகு, உறுதித்தன்மை இல்லையெனில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதில் கிடைத்தது.
ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை கால்நடை மருத்துவத் துறை மற்றும் பொதுப்பணித் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் இக் கட்டடத்தை ஆய்வு செய்யவில்லை.
உடனடியாக பொதுப்பணித்துறை, கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து, உறுதித் தன்மையில்லாத இக்கட்டடத்தை இடித்து அகற்றி, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.