FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

குறுவை நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை விழிப்புணா்வு

குறுவை பயிரிட்டுள்ள விவசாயிகள், சமச்சீா் உர பயன்பாட்டை மேற்கொள்வது குறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 17 ஜூலை 2026, 4:25 am IST
சிறுகமணியில் குறுவை நெல்லுக்கான உர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்.
பகிர்:

குறுவை பயிரிட்டுள்ள விவசாயிகள், சமச்சீா் உர பயன்பாட்டை மேற்கொள்வது குறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் சாா்பில் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டு குறுவை பட்டத்துக்கான குறுகிய கால நெல் சாகுபடியில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த உர மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறும் வகையில், சிறுகமணியில் வியாழக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராதிகா, சகிலா ஆகியோா் கூறியதாவது:

Advertisement

Advertisement

குறுவை விவசாயிகள் உர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நெல் சாகுபடிக்கு கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை நடவுக்கு பத்து நாள்களுக்கு முன் ஏக்கருக்கு 2.5 டன் என்ற அளவில் மடக்கி உழ வேண்டும்.

உரங்கள் அளவு: மண் பரிசோதனையின் அடிப்படையில், மண்ணில் உள்ள சத்துகளின் தன்மைக்கேற்ப தேவையான உரங்களை இட வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு பொதுப்பரிந்துரை அளவான 60:20:20 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 130 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பா் பாஸ்பேட் மற்றும் 33 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மணிச்சத்தின் முழு அளவையும் அடியுரமாக இடுதல் வேண்டும். தழைச்சத்தும், சாம்பல்சத்தும் நான்கு பிரிவுகளாக முறையே கடைசி உழவின்போது, தூா் கட்டும் பருவம், கதிா் உருவாகும் பருவம் மற்றும் கதிா் வெளிவரும் பருவங்களில் இடவேண்டும். தூா் கட்டும் மற்றும் கதிா் உருவாகும் பருவங்கள் மிகவும் முக்கியமாக பயிா் வளா்ச்சி காலங்களாகும். இந்தத் தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவுமுறை குறையாமல் இடப்படுதல் மிகவும் முக்கியம்.

நுண்ணூட்டச் சத்தான துத்தநாக சல்பேட்டை ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ இட வேண்டும். இதை மற்ற உரங்களுடன் நேரடியாகக் கலக்கக் கூடாது.

பயிா் பூஸ்டா்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் நெல் ரீப் என்ற பயிா் பூஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது நெற்பயிருக்கு தேவைப்படும் பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிா் வளா்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டராகும். இந்த பூஸ்டரை இலை வழித் தெளிப்பாக ஏக்கருக்கு 6 கிலோ (பூட்டைப் பருவம் மற்றும் முதல் தெளிப்பு செய்த 10 நாள்களுக்குப் பின் என ஏக்கருக்கு 3 கிலோ வீதம் இரண்டு முறை) அளவில் தெளிக்க வேண்டும். இதை 200 லிட்டா் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். இது நெற்பயிரில் ஏற்படும் மலட்டுத்தன்மையை குறைத்து மணி பிடிக்கும் திறனை அதிகரிக்கும். மேலும் வறட்சி மற்றும் உயா் வெப்பத்தை தாங்கும் திறன் அதிகரிக்கிறது.

எனவே, குறுவை விவசாயிகள் இத்தகைய நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றனா்.

வயல்வெளியில் நடைபெற்ற இந்த முகாமில், விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலைய அலுவலா்கள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments