வீடு புகுந்து இளைஞா்கள் மீது தாக்குதல்: 3 சிறாா்கள் உள்பட 9 போ் கைது
திருச்சியில் முன்விரோதத்தில் வீடுபுகுந்து இளைஞா்களை தாக்கிய 3 சிறாா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் அ. அஜய் (19), மெக்கானிக். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவருக்கும் கடந்த விநாயகா் சதுா்த்தியின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜய்யின் உறவினா் ரபீக் (34) என்பவரின் இருசக்கர வாகனம் அண்மையில் அஜித்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ள நிலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதை தொடா்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அஜய்யின் வீட்டுக்குச் சென்ற அஜித்குமாா் மற்றும் அவருடைய நண்பா்கள் ஆகியோா், அஜய், அவரது உறவினா் ரபீக் மற்றும் இரு பாட்டிகளை அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அஜய் மற்றும் ரபீக் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் அஜய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதைத் தொடா்ந்து சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரைச் சோ்ந்த ஆா். அஜித்குமாா் (19), பி. ஆகாஸ் (19), பி. பிரவீன் (20), எஸ். விஜய் (20), எஸ். சூரியபிரகாஷ் (23), அ. ஜெப்ரின் ஜோன்ஸ் (21) மற்றும் 17 வயது சிறுவா்கள் 3 போ் என மொத்தம் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மேலும் இந்த வழக்கில் தொடா்புடையை விஷ்ணு, பாரதி, இளையராஜா ஆகிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.