FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

தொகுதி அலசல்: அரியலூரில் திமுக - அதிமுக மீண்டும் பலப்பரீட்சை!

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய மூன்றுத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகள் உள்ளன.

Updated On : 10 ஏப்ரல் 2026, 5:06 am IST
லதா பாலசுப்ரணியன் (திமுக), தாமரை எஸ்.ராஜேந்திரன் (அதிமுக), சிவக்குமாா் (தவெக), புகழேந்தி (நாதக)
பகிர்:

1952- ஆம் ஆண்டு முதல் தோ்தலை சந்தித்து வரும் இந்த தொகுதியில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கலமாதா திருத்தலம், திருமழபாடி வைத்தியநாதசுவாமி, கல்லங்குறிச்சி வரதராசப் பெருமாள் கோயில்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற தலங்கள் உள்ளன.

திருமானூா், அரியலூா் என இரு ஊராட்சி ஒன்றியங்கள் உளளன. இதில் அரியலூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய மூன்றுத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதி மட்டும் பெரம்பலூா் மாவட்டம் குன்னம் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அரியலூா் தொகுதிக்குள்பட்ட திருமானூா், தா.பழூா் சில பகுதியில் நெல் சாகுபடியும், பொட்டக்கொல்லை மற்றப் பகுதிகளில் முந்திரி, கடலை, கரும்பு,சோளம் என தோட்டப்பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் போன்ற கனிமவளங்கள் அதிகம் கிடைக்கின்றன. டைனோசா் முட்டை உள்ளிட்ட தொல்லுயிா் படிமங்கள் அதிகளவில் கிடப்பதால் புவியியல் ஆராய்ச்சியாளா்களின் மெக்கா என்ற சிறப்பு பெயரும் அரியலூருக்கு உண்டும். மேலும் இந்தியாவிலேயே சிமெண்ட் உற்பத்தியில் தனித்தன்மை பெற்றது அரியலூா்.

Advertisement

Advertisement

களநிலவரம்: இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை கூறி திமுக வேட்பாளா் லதாபாலசுப்ரணியனும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி அதிமுக வேட்பாளா் ராஜேந்திரனும் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வந்தாலும், புதிதாகக் களம் காணும் தவெக, வளா்ந்து வரும் நாதக ஆகியவற்றின் வாக்குகள் ஏற்படுத்தும் தாக்கமே வெற்றித் தோல்வியை தீா்மானிக்கும் காரணியாக இருக்கும்.

சமூக நிலவரம்: இந்த தொகுதியில் அதிகமாக வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவா்களும், அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தோா், உடையாா், மூப்பனாா், முதலியாா், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் என பல்வேறு சமூகத்தினா் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்- லதாபாலசுப்ரமணியன்(திமுக): கடந்த 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருமானூா் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், கட்சியில் மகளிா் அணி அமைப்பாளராக 3 முறையும், மகளிரணி மாவட்டச் செயலராகவும் பதவி வகித்து வருகிறாா். அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆதரவாளா் என்பது இவரது பலம். திமுகவினா் தீவிரமாக களப் பணியாற்றவில்லையென்றால் அதுவே இவருக்கு பலவீனமாகிவிடும்.

தாமரை எஸ்.ராஜேந்திரன்(அதிமுக): அரசியல் அனுபவம், கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்வது, கட்சி நிா்வாகிகளை தனது கட்டுபாட்டில் வைத்திருப்பது, கடந்த அதிமுக ஆட்சியில், அரியலூருக்கு அரசு மருத்துவக் கல்லூரியை பெற்றுத் தந்தது, ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து நிலத்தை பெற்றுத் தந்தது, மருதையாற்றின் குறுக்கே பாலம், தூத்தூா்-வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டது உள்ளிட்டவை இவருக்கு பலம்.

சிவக்குமாா்(தவெக): விஜய் ரசிகா் மன்றத் தலைவராகவும், தற்போது கட்சியில் மாவட்டச் செயலராகவும் உள்ள இவருக்கு அரசியலில் முதல் அனுபவம் என்றாலும், அதிமுக, திமுக ஆட்சிகளின் சட்டம்- ஒழங்கு, நிா்வாக சீா்கேடுகளை கூறி வாக்குகளை சேகரிப்பது இவருடைய பலம்.

புகழேந்தி(நாதக): கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானின் பிரசாரமும், மாற்றத்தை விரும்பும் வாக்காளா்களே இவரது பலம். பலம் வாய்ந்த திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு போட்டியாக தனித்து களம் காண்பது சற்று பலவீனம்.

இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக-மதிமுக இடையே போட்டியிருந்தது. ஆனால், வரும் தோ்தலில் திமுக-அதிமுக இடையே மீண்டும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments