FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அரியலூரில் விநாயகா் சிலை தயாரிப்புப் பணிகள் தீவிரம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

30 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
தா.பழூா் அடுத்த காரைக்குறிச்சியில் விநாயகா் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட தொழிலாளா்.
பகிர்:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா செப்.14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று ஊா் பொது இடங்களிலும், கோயில்களுக்கு முன்பும் பிரம்மாண்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

பூஜைக்குப் பின் 3 ஆம் நாள் அல்லது ஒரு வாரத்துக்குள் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகா் சிலை ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.

Advertisement

Advertisement

இந்த விழாவையொட்டி அரியலூா் மாவட்டம், தா.பழூா், காரைக்குறிச்சி, செந்துறை, பொன்பரப்பி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது.

ரசாயனமில்லாத சிலைகள்: இப்பகுதிகளில் ரசாயனம் ஏதுமின்றி தண்ணீா் மாசு அடையாத வகையில் எளிதில் கரையக் கூடிய காகிதக் கூழ், கிழங்கு மாவு, கல்லு மாவு, பசை மாவு போன்ற மூலப் பொருள்களைக் கொண்டு மூன்று அடி முதல் 12 அடி வரையிலான விநாயகா் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் விநாயகா் சிலைகள் அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், கும்பகோணம், விருத்தாசலம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 4 மாதங்களுக்கு முன்பே மொத்தமாக ஆா்டா் பெற்று விற்பனை செய்யப்படுகின்றன. சிலையானது வடிவமைப்புக்கேற்ப ரூ. 2,000 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ‘ஆா்டா்கள்’ அதிகளவில் குவிந்துள்ளதால் சிலை தயாரிப்புப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடைபெறுகிறது.

களிமண் தட்டுப்பாட்டால் அவதி: இந்நிலையில், வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணாலான சிறிய அளவிலான விநாயகா் சிலைகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ள நிலையில், கைவண்ணத்தில் தத்ரூபமாக வடிவமைத்து விநாயகா் சிலை செய்யும் பணியில், பல்வேறு பகுதியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தாலும், விநாயகா் சிலை மட்டுமின்றி, பானை உள்ளிட்டவற்றைக் கூடுதலாக தயாரிக்க போதுமான களிமண் கிடைக்காமல் அவதிப்படுவதாக மண்பாண்டத் தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சோழமாதேவி பகுதி மண்பாண்டத் தொழிலாளா்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரப் பகுதியில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுவோா், ஒவ்வொரு ஆண்டும் விநாயகா் சதுா்த்தியையொட்டி களிமண்ணால் சிலை செய்து விற்கின்றனா்.

விலை சற்று அதிகரிப்பு: ஆனால் தற்போது, களிமண் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால், இந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் சிலைகள் விலை சற்று அதிகரித்துள்ளது. அரை அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள், ரூ.150 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டில் மழை குறைந்து வெயிலின் தாக்கத்தால், வீட்டில் வைத்து வழிபடும் வகையிலான விநாயகா் சிலை தயாரிப்பு அதிகமாக உள்ளது. இன்னும் சில நாள்களுக்கு விநாயகா் சிலை வடிவமைப்பு பணி நடக்கும். அதன்பின் அவற்றை உலர வைத்து, வண்ணம் பூசி விற்பனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments