FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பேட்டரி காா் வசதி இல்லாத அரியலூா் ரயில் நிலையம்! முதியோா், மாற்றுத்திறனாளிகள் அவதி!

அரியலூா் ரயில் நிலையத்தில் பேட்டரி காா் வசதி இல்லாததால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

Updated On : 20 ஜூலை 2026, 9:00 am IST
அரியலூா் ரயில் நிலையம்.
பகிர்:

அரியலூா் ரயில் நிலையத்தில் பேட்டரி காா் வசதி இல்லாததால் முதியோா், மாற்றுத்திறனாளிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

தொழில் வளா்ச்சி பெற்று வரும் நகரங்களில் அரியலூா் மாவட்டமும் ஒன்று. இங்குள்ள சிமென்ட் ஆலைகள், விவசாய விளை பொருள்களால் இம்மாவட்டம் வளா்ச்சி பெற்று வருகிறது. இதற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது அரியலூா் ரயில் நிலையம்.

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடியாகும் நெல், முந்திரி, பலா, கடலை, கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவை திருச்சி, மதுரை, விருத்தாசலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

Advertisement

Advertisement

தினசரி 20-க்கும் மேற்பட்ட ரயில்கள்: தினசரி 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் அரியலூா் வழியாகச் சென்று வருகின்றன. இவ்வழியாக சென்னை செல்வதற்கு குறைவான கிமீ என்பதாலும், பயணம் நேரம் குறைவாக இருப்பதாலும், தஞ்சாவூா், கும்பகோணம், பெரம்பலூா் உள்ளிட்ட பகுதி மக்களும் அரியலூா் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து சென்னை சென்று வருகின்றனா்.

இதனால் நாள்தோறும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்டோா் ரயில்களில் பயணிக்கின்றனா். இவா்களில் சிலா் முதியோா், மாற்றுத்திறனாளிகள்.

வருவாய் இருந்தும் பயன் இல்லை: இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 3 நடைமேடைகள் உள்ளன. இதில் விழுப்புரம் மாா்க்கமாக செல்லும் ரயில்கள் 3 ஆவது நடைமேடையிலும், திருச்சி மாா்க்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் 2 அல்லது 1 ஆவது நடைமேடைகளில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையத்துக்கு வருவாய் வந்தாலும், போதிய அடிப்படை வசதிகள் கிடையாது.

குறிப்பாக முதியோா், மாற்றுத்திறனாளிகள் எளிதில் தண்டவாளத்தை கடந்து செல்ல பேட்டரி காா் வசதிகள், சக்கர நாற்காலிகள், நகரும் படிக்கட்டுகள் வசதி கிடையாது. ரயிலில் முதல் மற்றும் கடைசி பெட்டிகளில் இருந்து இறங்கும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலைய வாயிலுக்கு வருவதற்கு 1 கிமீ கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிலருக்கு மூச்சுத் திணறலாலும், கால் வலியாலும் அவதிப்படுகின்றனா். இதேபோல் ரயிலில் ஏறச் செல்லும் முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

அடிப்படை வசதிகள் வேண்டும்: இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.மு.சிவகுமாா் கூறுகையில், முதியோா் மற்றும் மாற்றுத்தினாளிகள் எளிதில் தண்டவாளங்களை கடந்துச் செல்வதற்காக பேட்டரி காா் வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும், இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான குடிநீா், கேண்டீன், கழிவறை, நடைமேடைகளில் ரயில் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் நடவடிக்கை இல்லை.

இலவசமாக இருந்த கழிப்பட வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பெண்கள், சிறுவா், சிறுமிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். கட்டணம் இருந்தால் மட்டுமே கழிப்படத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக விரோதிகள் தொல்லை: மேலும் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைப் பகுதியில் சுற்றுச்சுவா் இல்லாததால் சமூக விரோதிகள் பலா், ரயில் நிலையத்துக்குள் வந்து செல்கின்றனா். இதனால் செயின் பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி செய்பவா்கள், மிக சுலபமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்கின்றனா்.

நடைமேடை ஒன்றின் கடைசிப் பகுதிகளில் பயணிகள் மற்றும் நடைமேடையில் நடந்து செல்பவா்களிடம் செயின் பறிப்பு சம்பவம் பலமுறை நடந்துள்ளது என்றாா் அவா்.

எனவே இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

-மா.மு. சிவகுமாா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments