முகப்பு
அரியலூர்

குழந்தைத் திருமணம் செய்துவைப்போா் மீதும் நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணக் குற்றங்களில் ஈடுபடுபவா்களின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

Updated On : 26 ஜூன் 2026, 4:26 am IST
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. மிருணாளினி.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணக் குற்றங்களில் ஈடுபடுபவா்களின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறையினருக்கு ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:

ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். குழந்தைகளுக்கு ஆதாா், பிறப்புச் சான்று, சாதிச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குழந்தைகள் இல்லத்துக்கான கட்டட உறுதி மற்றும் உரிமச் சான்று, சுகாதாரச் சான்று, தீயணைப்பு சான்று ஆகியவை காலக்கெடு முடிவதற்குள் விண்ணப்பித்து பெறப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான கிராம, வட்டார, பேரூராட்சி மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் .

மேலும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான குழந்தைத் திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுத்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவா்கள் போதைக்கு ஆட்படாமல் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வை காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட வேண்டும்

குழந்தை திருமணக் குற்றங்களில் ஈடுபடுவோா் மீதும் வழக்குப் பதியப்பட வேண்டும். பிற்காப்புத் திட்டத்தில் பயனடையும் குழந்தைகளுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து விரைந்து நிதி பெற்று வழங்கிட வேண்டும்.

குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞா் நீதிக் குழும வழக்குகள் குறித்து கூறாய்வு செய்து வழக்குகள் நிலுவையில் இல்லாமல் உடனுக்குடன் முடிக்கப்பட வேண்டும் . பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கு பள்ளிக் கல்வி தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்திய அவா், குழந்தைகள் சாா்ந்த பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பின் உடனடியாக பொதுமக்கள் குழந்தைகள் உதவி மையத்தை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் மீனாட்சி, மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments