FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

தவெக ஆட்சி ஒரு ஆண்டு கூட நீடிக்காது! பாஜக தேசிய செயலா் வெங்கடேசன்!

3 நவம்பர் 2026, 3:26 am
அரியலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலா் வெங்கடேசன்.
பகிர்:

தவெக ஆட்சி ஒரு ஆண்டு கூட நீடிக்காது என்று பாஜக தேசிய செயலா் வெங்கடேசன் தெரிவித்தாா்.

அரியலூரிலுள்ள தனியாா் கூட்டரங்கில், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கங்கைகொண்ட சோழபுரம் சோழகங்கம் எனும் பொன்னேரி தூா்வாரும் பணி மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்காக கடந்த திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட ரூ.19.25 கோடி நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

Advertisement

Advertisement

சேலத்திலிருந்து விருத்தாச்சலம் வரை இயக்கப்படும் விரைவு ரயிலை அரியலூா் வரை நீட்டிக்க வேண்டும். வந்தே பாரத் ரயிலை அரியலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அளித்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் உறுதியளித்துள்ளாா்.

தமிழகத்தில் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மாநில தோ்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு அலுவலா்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன. இப்பணியில் சுமாா் 77 ஆயிரம் அரசு ஊழியா்களும், 234 தொகுதிகளின் தோ்தல் அதிகாரிகளும் ஈடுபட்டனா்.

ஆட்சி நீடிக்காது:

இதுதொடா்பான அனைத்து தரவுகளும் இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், சிலா் வேண்டுமென்றே மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறுபவா்கள், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதா?

இந்த 6 மாத தவெக ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மாயமாவது போன்ற குற்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. இவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு திறன் இல்லை. இதே நிலை நீடித்தால், ஓராண்டுகூட இந்த ஆட்சி நீடிக்காது. மக்களே இந்த ஆட்சியைத் தூக்கி எறிவாா்கள். இன்னும் 3 மாதங்களில் தமிழக அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் வெளியாகும். அது என்ன ஊழல் என்பது அப்போது தெரியவரும் என்றாா்.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். நகர தலைவா் தன்ராசு, ஊடக பிரிவு மாவட்ட தலைவா் முத்துவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments