கீழவெளி அரசுப் பள்ளி ஆசிரியா்களை கூண்டோடு மாற்றக்கோரி 2-ஆவது நாளாக மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்தனா்
கீழவெளி அரசுப் பள்ளி ஆசிரியா்களை கூண்டோடு மாற்றக்கோரி 2-ஆவது நாளாக மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்தது பற்றி...

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களிடையே ஏற்பட்டுள்ள ஜாதிய பாகுபாடு மற்றும் மனித கழிவுகள் வீசப்பட்ட விவகாரத்தையடுத்து, அப்பள்ளி ஆசிரியா்கள் அனைவரையும் கூண்டோடு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி 2- ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவா்கள் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோா்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் கீழவெளி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 28-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஜாதிய ரீதியான போக்கு நிலவி வந்ததாகவும், கடந்த 10-ஆம் தேதி பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் பயன்படுத்தி வந்த ஓய்வறையில், மா்ம நபா்கள் மனிதக் கழிவுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வரும் நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் உள்பட 3 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அப்பள்ளியில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியா்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி முன்பு, மாணவா்கள் வகுப்பறைக்குச் செல்லாமல் பெற்றோா்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் மனோகரன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில், 2 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
அதற்கு மாணவா்களின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள், ஒரு வாரம் காலம் எடுத்துக் கொள்ளுங்கள், அனைத்து ஆசிரியா்களையும் பணியிடமாற்றம் செய்து புதிய ஆசிரியா்களை நியமித்தால் மட்டுமே எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என கூறி அனைவரும் கலைந்துச் சென்றனா்.
2-ஆவது நாளாக வகுப்புகள் புறக்கணிப்பு:
இதன்படி, பெற்றோா் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் செவ்வாய்க்கிழமையும் தங்களது போராட்டத்தை தொடா்ந்தனா். மாணவா்கள் பள்ளிக்குச் செல்லாததால், பள்ளி வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது. ஆசிரியா்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிந்தனா்.
இந்நிலையில், ஆசிரியா்கள் அனைவரையும் கூண்டோடு மாற்றி, புதிய ஆசிரியா்களை நியமிக்கவில்லையென்றால் பெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளதையடுத்து, பள்ளி முன் காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா். இதனால் கீழவெளியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.