பராமரிப்பின்றி அரியலூர் புதிய பேருந்து நிலையம்!
அரியலூரில் 5 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
நமது நிருபர்
அரியலூரில் 5 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
அரியலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, பெரம்பலூர், சிதம்பரம், திருச்சி, பெரம்பலூர், சேலம், விருத்தாசலம், துறையூர், தேனி, திண்டுக்கல், பழனி ஆகிய வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மினி பேருந்துகள், நகரப் பேருந்துகள் ஆகியவை பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இப்பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள், பயணிகள் நிழற்குடைகள் மிகவும் பழுதடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் அளைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது.
புதிய பேருந்து நிலையக் கட்டடம்: இதையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு பேருந்து நிலையத்திலுள்ள அனைத்துக் கட்டடங்களையும் இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அதற்கான பணிகள் ரூ.11.58 கோடியில் நடைபெற்றுகடந்த 7.32026 அன்று புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
பூட்டியே கிடக்கும் கடைகள்: பேருந்து நிலையத்திலுள்ள 50 கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக வந்த புகாரையடுத்து ஆட்சியர் கடை ஏலத் தேதியை ஒத்திவைத்தார்.
இதனிடையே பழைய பேருந்து நிலையக் கட்டடத்தில், கடை நடத்தி வந்த வியாபாரிகள், நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடைகள் ஏலம் விடுவதில், பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனாலும் நகராட்சி நிர்வாகம் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதிலும், கடைகள் ஏலம் விடுவதிலும் கடந்த 5 மாதங்களாக காலம் தாழ்த்தி வருகிறது.
பேருந்து நிலைய கட்டடங்கள் விரிசல்: இந்நிலையில், இப்பேருந்து நிலையத்தை திறந்து 3 மாதங்களிலேயே ஜூன் மாதம் பேருந்து நிலையக் கட்டடத்தின் மேற்கூரையில் விரிசல் விழுந்து மழைநீர் கசிந்தது.
இதுகுறித்து விசாரணை நடத் திய மாவட்ட ஆட்சியர் த. மிருணாளினி, கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சேதமடைந்த பகுதிகள் உடனடியாகச் சீரமைக்கப்பட்டன.
இதற்கிடையே, பேருந்துநிலையத்தின் திருச்சி பேருந்துகள் நிற்கும் வழித்தடத்தின் இடப்புறத்திலுள்ள கட்டடத்தின் சுவர்கள் விரிசல் விழுந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழத் தொடங்கின. இந்த விரிசல் நாளடைவில் பெரியதாக நீண்டுகொண்டு செல்கிறது.
பராமரிப்பு இல்லை: தற்போது இந்தப் பேருந்து நிலையம் தரைத்தளத்தில் பதிக்கப்பட்டிருந்த சிமென்ட் கற்கள் பெயர்ந்தும், ஒரு பகுதி பெயர்ந்து குண்டும் குழியுமாகவும் உள்ளது. பயணிகள் அமரக்கூட இருக்கைகள் கிடையாது. சுற்றிலும் அசுத்தமாகவும் மாறியுள்ளது.
மது அருந்தும் கூடம்: கல்லங்குறிச்சி சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவோர் பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்குள்ள தரைத்தளம் மற்றும் மாடியில் அமர்ந்து, மது அருந்திவிட்டு அதன் காலிப்பாட்டில்களை அங்கேயே உடைத்தும், பிளாஸ்டிக் பொருள்களை வீசிச்சென்றும் விடுகின்றனர்.
அந்த மது பாட்டில்களின் துண்டுகள் பலரின் கால்களை பதம் பார்த்து விடுகின்றன. பேருந்து நிலையத்தைச் சுற்றி கழிவுகளுடன் அசுத்தமாக உள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை: இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ரூ.11.58 கோடியில் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள்கூட கிடையாது. நகராட்சியின் தவறான நிர்வாகத்தால், இங்குள்ள 40-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. அவசரத்துக்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதென்றால் கூட பேருந்து நிலையத்தின் வெளியே 500 மீட்டர் தொலைவிலுள்ள கடைக்குச் செல்ல வேண்டி உள்ளது.
மேலும் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள்கூட கிடையாது. தரையில் அமர்ந்தால் சுற்றிலும் அசுத்தமாக உள்ளது. பேருந்து நிலையம் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தைக் கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.