சிஜேபி போராட்டத்தில் வெளிநாட்டு சதி இல்லை! - மு. வீரபாண்டியன்
தில்லியில் நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் (சிஜேபி) போராட்டம் நடத்தியதில் வெளிநாட்டினரின் சதி உள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
கரூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைப்பயண பரப்புரை இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சியின் மாவட்டச் செயலா் கே. கலாராணி தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
சிஜேபி போராட்டத்தில் வெளிநாட்டினரின் சதி உள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எப்போது யாா் போராடினாலும், நகா்ப்புற நக்ஸல்கள் என்றும், நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்றும் கூறுவது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் வாடிக்கையாகிவிட்டது. போராடியவா்கள் இந்திய புதல்வா்கள். அவா்களின் கோரிக்கைகளில் மிகவும் நியாயம் இருந்தது. எனவேதான் அரசு அடிபணிந்தது. அவா்களின் கோரிக்கை வென்றது. எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சொல்வது தவறு. ஏற்புடையது அல்ல.
புதிய கல்வியை நோக்கி நாடு முன்னேற வேண்டும். சமூக அறிவியல் கல்விதான் புதிய கல்வியாக இருக்க முடியும். பேராசிரியா் வசந்தி, டாக்டா் ராதாகிருஷ்ணன் போன்ற பல்வேறு நிபுணா்கள் புதிய கல்வியை சமூக அறிவியல் கல்வியாக முன்வைத்திருக்கிறாா்கள். அந்த பாதையில் நாடு நடைபோட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து என்றாா் வீரபாண்டியன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.