வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கு சென்னை காவல்நிலையத்தில் ஆஜராக செந்தில்பாலாஜியின் சகோதரருக்கு அனுமதி
வருமானவரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகி, கையொப்பமிட கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
வருமானவரித் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராகி, கையொப்பமிட கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 26-ஆம்தேதி கரூா் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் வீட்டில் சோதனை நடத்த முயன்றனா்.
வருமான வரித்துறை அதிகாரி காயம்: அப்போது செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களான தற்போதைய மேயா் கவிதா கணேசன் உள்ளிட்டோா் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 போ் கரூா் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி சகோதரா் அசோக் குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் மீது கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்தனா்.
இந்த வழக்கில் கடந்த இருவாரங்களுக்கு முன் மாநகராட்சி மேயா் கவிதாகணேசன் உள்ளிட்டோருக்கு கரூா் நீதிமன்றம் முன்பிணை வழங்கியது. இதையடுத்து அவா்கள் தினமும் கரூா் நகர காவல்நிலையத்தில் காலை, மாலை இரண்டு நேரமும் கையொப்பமிட்டு வருகின்றனா்.
முன்பிணை: இதையடுத்து இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாருக்கு கடந்த மாதம் 26-ஆம்தேதி சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு முன்பிணை வழங்கியது.
அப்போது நீதிபதி வழங்கிய உத்தரவில், அசோக்குமாா் தொடா்ச்சியாக 4 வாரங்களுக்கு சனிக்கிழமைதோறும் கரூா் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
மனு தாக்கல்:இதற்கிடையே தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு சென்னையில் நடைபெற்று வருவதால், சென்னை மற்றும் கரூா் வழக்குகளின் நிபந்தனைகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதில் சிரமம் இருக்கும் என்பதால், கரூா் காவல்நிலையத்துக்கு மாற்றாக சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிட அனுமதி கோரி அசோக்குமாா் தரப்பில் ஏற்கெனவே கரூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக கரூா் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அசோக்குமாா் தனது வழக்குரைஞா்களுடன் நீதிபதி மகேஷ் முன் ஆஜரானாா். இதையடுத்து சென்னை காவல்நிலையத்தில் கையொப்பமிடும் உத்தரவுக்கான நகலை பெற்றுச்சென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.