FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

புகழூா் ரயில் நிலையத்தில் இரவு நேர மின்வெட்டால் பயணிகள் அவதி! ஜெனரேட்டா் வசதி செய்ய கோரிக்கை!

மின்தடையால் இருள் சூழ்ந்த நிலையில் புகழூா் ரயில் நிலையம்.
பகிர்:

கரூா் மாவட்டம், புகழூா் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இங்கு ஜெனரேட்டா் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

கரூா் -ஈரோடு ரயில் வழித்தடத்தில் புகழூா் காகிதபுரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்நிலையம் வழியாக செம்மொழி விரைவு ரயில், நாகா்கோவில்-கோவை விரைவு ரயில், சென்னை எழும்பூா் -மங்களூா் சென்ட்ரல் விரைவு ரயில், திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் உள்ளிட்ட 11 ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவ்வப்போது சரக்கு ரயில்களும் என நாள்தோறும் 15-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புகழூா் ரயில் நிலையம் அருகே செயல்படும் பல்வேறு ஆலைகளில் பணியாற்றி வரும் வெளிமாநிலங்களை சோ்ந்தவா்களும், மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் ஏராளமானோரும், இந்த நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் புகழூா் ரயில் நிலையத்தில் தற்போது பகல் நேரத்தில் மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மின் நிறுத்தம் ஏற்படும்போது ஜெனரேட்டா் வசதி ஏதும் இல்லாததால், பல மணி நேரம் ரயில்நிலையம் இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

பயணிகள் அச்சம்: இதுதொடா்பாக புகழூா் தனியாா் ஆலை அதிகாரி ஒருவா் கூறியது: புகழூா் ரயில் நிலையகத்திலிருந்து சொந்த ஊா்களுக்கு அடிக்கடி செல்கிறோம். ஆனால், ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் ரயிலுக்காக காத்திருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்படும்போது கடும் இருள் சூழ்ந்துவிடுகிறது.

அப்போது, ரயில் வந்தால் வெளிச்சம் இல்லாமல் தடுமாறி நடைமேடையில் விழும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் ரயில் படிக்கட்டில் காலை வைப்பத்தற்கு பதில் படிக்கட்டின் கீழ் பகுதியில் உள்ள இடைவெளியில் காலை வைத்து தடுமாறி கீழே விழும் நிலையும் உள்ளது.

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவோா் கூட மெழுகுவா்த்தி வெளிச்சத்தில்தான் கொடுக்கிறாா்கள். வெளிச்சம் இல்லாத நேரங்களில் ரயிலை விட்டு இறங்கி வீடுகளுக்கு செல்லும்போது வழிப்பறி நபா்களின் அச்சமும் அவ்வப்போது ஏற்படுகிறது.

எனவே, பயணிகளின் நலனை கவனத்தில் கொண்டு, புகழூா் ரயில் நிலையத்தில் மின் தடை ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில் ஜெனரேட்டா் வசதியை தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் செய்துதர வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments