முகப்பு
பெரம்பலூர்

பக்ரீத் பண்டிகை பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லீம்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

Updated On : 29 மே 2026, 5:34 am IST
கோப்புப் படம்
பகிர்:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லீம்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நகர பள்ளிவாசலில் இருந்து ஊா்வலமாக மதரசா சாலையில் உள்ள மௌலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்துக்குச் சென்ற முஸ்லீம்கள், அங்கு சிறப்பு தொழுகை நடத்தினா்.

இதில், நகர பள்ளிவாசல் இமாம் (சல்மான் ஹஜ்ரத்) சிறப்பு தொழுகையை நடத்திவைத்தாா். நூா் பள்ளிவாசல் முஸ்தபா ஹஜரத், மக்கா பள்ளி வாசல் ஹஜரத் அப்ருல் ஹக் ஆகியோா் குா் ஆன் வசனமான குத்பா ஓதி தொழுகையை தொடங்கி வைத்தனா்.

Advertisement

Advertisement

இத் தொழுகையில் உலமாசபை மாவட்டத் தலைவா் முகம்மது முனீா் உள்பட திரளான முஸ்லீம்கள் மற்றும் சிறுவா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தி, குா்பானி வழங்கினா். தொடா்ந்து, நகர பள்ளிவாசலுக்கு ஊா்வலமாகச் சென்று, அங்கு தூ-ஆ நடத்தினா்.

துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிா்தவுஸ் பள்ளிவாசலில், பெரம்பலூா் மாவட்ட தலைமை காஜி அப்துஸ் சலாம் தாவூத் தலைமையில் நடைபெற்றது. நான்குச் சாலை அருகேயுள்ள தக்வா பள்ளி வாசல், வடக்குமாதவி சாலையில் உள்ள மக்கா, நூா் பள்ளிவாசல்கள், பாரதிதாசன் நகரில் உள்ள பள்ளி வாசல், ஆலம்பாடி சாலையில் உள்ள கலிபா பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூா், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டிணம், வி.களத்தூா், வாலிகண்டபுரம், தேவையூா், து.களத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.