பிரம்ம ரிஷி மலையில் நாளை தீபத் திருவிழா: 2 ஆயிரம் மீட்டா் திரி தயாரிக்கும் பணி தீவிரம்!
எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் நவ. 24 நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திரி தயாரிக்கும் பணி தொடங்கியது.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 2 ஆயிரம் மீட்டா் திரி தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 44-ஆம் ஆண்டு தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.
இவ் விழாவில் 2 ஆயிரம் மீட்டா் திரி, 1,008 லிட்டா் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில் சாதுக்களுக்கு காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
திரி தயாரிக்கும் பணியை மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி தலைமையில், தவயோகிகள் சுந்தர மகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் முன்னிலையில், சிவ பக்தா்கள் திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில், பக்தா்கள் மற்றும் அறக்கட்டளை மெய்யன்பா்கள் ஈடுபட்டுள்ளனா்.
நவ. 24-ஆம் தேதி காலை 7 மணியளவில் எளம்பலூா் காகன்னை ஈஸ்வரா் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மகா தீப செப்புக் கொப்பரை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊா்வலமாக பிரம்ம ரிஷி மலைக்கு கொண்டுவரப்படுகிறது. ஏற்பாடுகளை, மகா சித்தா்கள் அறக்கட்டளை மெய்யன்பா்கள் செய்து வருகின்றனா்.