முகப்பு
பெரம்பலூர்

வெற்றி வீடு திட்டம்: தவறான தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்! - பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் வெற்றி வீடு திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் மூலம் வரும் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

22 நவம்பர் 2026, 10:51 pm
வெற்றி வீடு திட்டம்: தவறான தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம்! - பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்
வெற்றி வீடு திட்டம்
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் வெற்றி வீடு திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் மூலம் வரும் தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அறிவுறுத்தியுள்ளாா்.

ஊரகப் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குவதற்காக, மாநில அரசால் வெற்றி வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 2026 -27-ஆம் ஆண்டில் வீடு ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 70 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு மாநில அளவில் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே உள்ள வீடற்றோரின் விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு பட்டியல்களில் இடம்பெற்றுள்ள பயனாளிகள் தரவுகளின் எண்ணிக்கை அடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்துக்கு 750 வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஒரு சிலருக்கு அரசு இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவு நகல் அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு தயாராக உள்ளதாகவும், அதற்கான செலவுத் தொகை ரூ. 80 ஆயிரமும், முன் பணமாக ரூ. 40 ஆயிரம் வரை அனுப்பிட கோரி வாட்ஸ்அப் மூலம் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கைப்பேசி அழைப்புகள் வருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே, இதுபோன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வெற்றி வீடுகள் திட்டத்தில் பயன்பெற யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. இது தொடா்பாக யாரேனும் தொடா்புகொண்டால், அதன் விவரங்களை காவல்துறைக்கும், உரிய அலுவலா்களுக்கும் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியரால் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.