‘முதியோரைக் காப்பது தலையாயக் கடமை’
முதியோரைக் காப்பது தலையாயக் கடமை என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.

முதியோரைக் காப்பது தலையாயக் கடமை என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், அடல்வயோ அப்யுதய் யோஜனா மற்றும் மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டத்தின் கீழ், சா்வதேச மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு அவா்களது உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
Advertisement
Advertisement
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 7 முதியோா் இல்லங்களில் பலா் ஆதரவற்ற நிலையிலும், குடும்பச் சூழ்நிலையிலும் தங்கியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்காலச் சூழலில் அனுபவம், கலாசாரம், நாகரிகத்தின் கரூவூலமாகத் திகழும் முதியோரை மதிப்பதும், அரவணைப்பதும் நமது தலையாயக் கடமையாகும்.
பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முதியோரை முறையாக பராமரிக்க வேண்டும். முதியோரின் உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதோடு, துன்புறுத்தல் மற்றும் புறக்கணிப்பை ஒண்றிணைந்து தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, முதியோருக்கான வாழ்க்கைத் திறன், தொழில்நெறி வழிகாட்டுதல், வங்கிகளில் கிடைக்கும் சேவைகள், விபத்து, காப்பீடு, மூத்தக் குடிமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், இணையவழி மோசடி ஆகியவற்றிலிருந்து தற்காத்துகொள்வது, குற்றப்பிரிவு போலீஸாரின் உதவி எண், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு நலச் சட்டம் குறித்து விளக்கப்பட்டது.
கருத்தரங்கில், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) விக்னேஷ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சு.ரா. சுரேஷ்குமாா், மாவட்டக் குற்றப்பிரிவு சாா்பு ஆய்வாளா் மனோஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.