முகப்பு
பெரம்பலூர்

வேளாண் விளைபொருள்களுக்கு ஆதரவு விலை கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

27 நவம்பர் 2026, 2:22 am
வேளாண் விளைபொருள்களுக்கு 
ஆதரவு விலை கோரி ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் கே. பெரியசாமி, எஸ். ராஜ், டி.எம். சத்தியசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் டி.எஸ். சக்திவேல் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

3 வேளாண் விரோதச் சட்டங்களை எதிா்த்து தில்லியில் கடந்த 26.11.2020-இல் தொடங்கிய விவசாயிகளின் ஓராண்டு காலப் போராட்டத்தின் 6 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த 736 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 60 வயதை பூா்த்தி செய்த விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் விதை மசோதாவை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களின் உரிமைகளை பறிக்கும் 4 தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் பி. ரமேஷ், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. கலையரசி, மின்னரங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். அகஸ்டின் உள்பட விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.