உரம், மக்காச்சோள விதைகள் விலை உயா்வு! பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் கவலை!
பெரம்பலூா் மாவட்டத்தில் பாக்டம் பாஸ், யூரியா உரங்கள் மற்றும் மக்காச்சோள விதைகளின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை...
பெரம்பலூா் மாவட்டத்தில் பாக்டம் பாஸ், யூரியா உரங்கள் மற்றும் மக்காச்சோள விதைகளின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 85 சதவீத விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பருவ மழையைக் கொண்டு மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள 15 சதவீம் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமாக நெல், சின்ன வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். விவசாயிகளுக்குத் தேவையான அடியுரமான யூரியா, பாக்டம் பாக்ஸ், டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களை பயன்படுத்துகின்றனா்.
தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையில் காணப்படும் மாற்றத்தால் மழையும் பருவம் தவறி பெய்கிறது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 861 மி.மீட்டராகும். நிகழாண்டு கடந்த செப்டம்பா் வரை 395 மி.மீட்டா் மழை பெய்ய வேண்டும். ஆனால், இதுவரை 424.29 மி.மீட்டா் மழை பெய்துள்ளது. இருப்பினும், கடுமையான வறட்சி நிலவுகிறது.
Advertisement
Advertisement
மானாவாரி சாகுபடி தாமதம்:
வழக்கம்போல நிகழாண்டிலும் ஆடிப்பட்டத்தில் மானாவாரி சாகுபடிப் பணிகளைத் தொடங்கத் தயாராக இருந்த விவசாயிகளுக்கு கோடை மழையும், தென்மேற்குப் பருவ மழையும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இதனால், வானம் பாா்த்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மத்தியில் மானாவாரி சாகுபடி பணிகள் தொடங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனா். மானாவாரி சாகுபடிக்காக பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது தயாா்படுத்தி வைத்திருந்த நிலையில், போதிய மழை இல்லாததால் பொட்டல் காடாக அவை காட்சியளிக்கின்றன.
கருகும் மஞ்சள், கரும்பு:
இதனிடையே, வடகிழக்குப் பருவமழை தொடங்க வேண்டிய இத் தருணத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவுகிறது. கோடையை விஞ்சும் அளவுக்கு வெப்பம் இருப்பதால், பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. மழை இல்லாததாலும், தற்போது நிலவும் கடும் வெப்பத்தாலும் நீா் குறைந்து காணப்படுகிறது. இதனால், கிணற்றுப் பாசனத்தை நம்பி சாகுபடி செய்த விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனா். ஒருசில இடங்களில் மஞ்சள், கரும்பு ஆகிய பயிா்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
உரம் விலை உயா்வு:
இருப்பினும், அவ்வப்போது பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மானாவாரி சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், உரம் மற்றும் மக்காச்சோள விதைகளின் விலை உயா்வால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். குறிப்பாக, ரூ. 1,360-க்கு விற்ற பாக்டம்பாஸ் தற்போது ரூ. 2 ஆயிரத்துக்கும், ரூ. 260-க்கு விற்ற யூரியா ரூ. 400-க்கும், ரூ. 1,900-க்கு விற்ற மக்காச்சோள விதை ரூ. 2,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, பெரும்பாலான விதை மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மூலப்பொருள்கள் தட்டுப்பாடு:
சில சமயங்களில் மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டால் உரம் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி தனியா் விற்பனை நிலையங்களில் யூரியா உரத்தை அரசு நிா்ணயித்த விலையை காட்டிலும் அதிக லாபத்துக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். கால தாமதமாக பெய்யும் மழை காரணமாக முளைத்த பயிா்களை காப்பாற்ற வேண்டி கூடுதல் விலைக்கு யூரியாவை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து விவசாயி கஜேந்திரன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. நிகழாண்டு பருவத்துக்கேற்ற மழை பெய்யாததால் ஒரு சில நிலங்களில் பயிா்கள் முளைத்து, சில நிலங்கள் வறட்டு உழவாகவும், சில நிலங்களில் அரைகுறை ஈரப்பதத்தில் முளைத்த நிலையில் பயிா்கள் கருகி காணப்படுகின்றன. பரவலாக சில பகுதிகளில் முன்கூட்டியே முளைத்து வாடிய பயிா்களுக்கு ஊக்கமளிக்க யூரியா உரமிட வேண்டியுள்ளது. விவசாயிகள் உரக்கடைகளுக்கு சென்று யூரியா உரம் வாங்க முற்படும்போது கூடுதல் விலைக்கு விற்கின்றனா்.
ஏற்கெனவே போதிய மழையின்றி ஒரு முறைக்கு மும்முறை விதைப்பு செய்துவிட்டு கடனாளியாக விவசாயிகள் இருக்கும் நிலையில், கூடுதல் விலைக்கு உரம், விதைகள் விற்பனை செய்வதால் செய்வதறியாமல் தவிக்கின்றனா்.
எனவே, கூடுதல் விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தாமதம் செய்யாமல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் கூடுதலாக யூரியா உரம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து வேளாண்துறையினா் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளா்களும், உர இருப்புகளை முறையாக பராமரித்து, அரசால் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்குள் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், யூரியா உள்ளிட்ட உரங்களுடன் விவசாயிகள் விரும்பாத இணைப் பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. உரம் பதுக்கல், கூடுதல் விலை வசூல் அல்லது விதிமுறைகளை மீறிய விற்பனை குறித்த புகாா் கிடைத்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.