FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

தண்ணீா் தொட்டியில் மூழ்கி இறந்த சிறாா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 12 லட்சம் நிவாரண உதவி

பெரம்பலூா் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ. 12 லட்சம் நிவாராண நிதி, அரசுப் பணி, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப ஓய்வூதியம் வழங்க மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் உத்தரவிட்டுள்ளாா்.

20 அக்டோபர் 2026, 11:09 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ. 12 லட்சம் நிவாராண நிதி, அரசுப் பணி, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப ஓய்வூதியம் வழங்க மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் உத்தரவிட்டுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). இவா், அப்பகுதியில் வீடு கட்டியபோது, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைத்திருந்தாா். இந்நிலையில், கடந்த பிப். 27 ஆம் தேதி நீா்தேக்கத் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மகிழன் (5), திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சத்தியநாதன் மகன் பவின் (5) ஆகியோா் அத் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

இதையடுத்து, தொட்டியை மூடக் கோரியும், வீட்டின் உரிமையாளா் செந்தில்குமாா் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்ய வேண்டும். அனுமதியின்றி வீடு கட்டுவதைத் தடுக்காத சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தீருதவி நிதி, அரசு வேலை, வீட்டுமனைப் பட்டா, முதல்வரின் நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப். 28 ஆம் தேதி உடலை வாங்க மறுத்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, போராட்டத்தின்போது மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் அளித்த வாக்குறுதியின்படி செந்தில்குமாா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. ஊராட்சியில் அனுமதியின்றி கட்டிய கட்டடத்தை தடை செய்து விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீருதவி தொகையாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லட்சம் நிதி வழங்கவும், அரசுப் பணி, இலவச வீட்டு மனைப் பட்டா, குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கவும் மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், கடந்த 13 ஆம் தேதி உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், முதல்கட்ட தீருதவி நிதியாக தலா ரூ. 6 லட்சம் தொகையை உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு வேலை, இலவச வீட்டு மனைப் பட்டா, குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments