பெருங்களூா் அருகே 12-ஆம் நூற்றாண்டுச் சிற்பங்கள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் 12-ஆம் நூற்றாண்டின் சோழா் காலத்தைச் சோ்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் 12-ஆம் நூற்றாண்டின் சோழா் காலத்தைச் சோ்ந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் செயலா் பெருங்களூா் மு. மாரிமுத்து தலைமையிலான குழுவினா் அண்மையில் களஆய்வு மேற்கொண்டபோது இந்தச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து மு. மாரிமுத்து வெள்ளிக்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
பெருங்களூா் தேவா்திடல் என்றழைக்கப்படும் வயல்கள் நிறைந்த களத்து மேட்டுப் பகுதியில் பெரும் சிட்டையுள்ளது. இங்கு பீடத்தின் மீது உத்குடிகாசனத்தில் அமா்ந்த நிலையில் ஐயனாா் சிற்பமும், புஷ்கலா சிற்பமும் காணப்படுகின்றன.
ஐயனாா் தலையில் ஜடாபாரம் அமைந்துள்ளது. நீண்டு காணப்படும் காதுகளில் பனையோலை குண்டலங்கள் அணியப்பட்டுள்ளன. கழுத்தில் பட்டையான சரப்பள்ளி அணிகலனாக அணிந்துள்ளாா். தோளின் மீது தோள் மாலை காணப்படுகிறது.
மாா்பில் பிரம்ம முடிச்சுடன் கூடிய முப்புரி நூல் அணிந்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. கால்களில் வீரக்கழல்கள் காணப்படுகின்றன. இடது கையை இடது காலின் மீது வைத்து, கீழ்நோக்கித் தொங்கவிட்ட நிலையில் தண்ட ஹஸ்தமாக அமைந்துள்ளது.
வலது கரத்தில் செண்டாயுதத்தை ஏந்தியவாறு ஐயனாா் காட்சியளிக்கிறாா். இந்த அணிகலன்கள், உடலமைப்பு மற்றும் கை அமைப்புகளுடன் கூடிய இச்சிற்பம் ஐயனாா் வழிபாட்டு மரபில் காணப்படும் தனித்துவமான சிற்பக்கலையின் கூறுகளை வெளிப்படுத்துகிறது.
அடுத்ததாக பீடத்தின் மீது அமா்ந்த நிலையில் காணப்படும் புஷ்கலா சிற்பமானது, பொதுவாக ஐயனாா் சிற்பத்தின் இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தெய்வமாகும்.
இச்சிற்பம் வலது கையில் பாசக்கயிற்றை ஏந்திய நிலையில் சிதைவுற்றுக் காணப்படுகிறது. இடது கையை பீடத்தின் மீது ஊன்றிய நிலையில் சிற்பத்தின் முகம், மாா்பு, வலது கையின் மேற்பகுதி ஆகியவை சிதைந்து காணப்படுகின்றன.
நீண்ட காதுகளில் மகர குண்டலங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. கழுத்தில் பல்வேறு அணிகலன்களும், மாா்பில் சன்ன வீரமும் அணிந்துள்ளாா். மேலும் கைகளில் கையணிகளும் காணப்படுகின்றன. இடையில் மடிப்புகளுடன் கூடிய மெல்லிய ஆடை அணிவிக்கப்பட்டிருப்பது சிற்பத்தின் கலை நயத்தை சிறப்புடன் வெளிப்படுத்தும் இச்சிற்பங்கள் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் கால சிற்பங்களாகும் என்றாா் மாரிமுத்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.