கட்சியில் உழைப்புக்கேற்ற பதவி உறுதி: அமைச்சா் முகமது பா்வேஸ் பேச்சு
தவெகவில் உழைப்புக்கு ஏற்ற பதவிகள் கட்டாயம் கிடைக்கும் என்றாா் மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
தவெகவில் உழைப்புக்கு ஏற்ற பதவிகள் கட்டாயம் கிடைக்கும் என்றாா் மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்.
புதுக்கோட்டை திலகா் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தற்போது நடப்பது மக்களின் ஆட்சி, சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை தைரியமாக மக்களுக்கு வெளிப்படையாக காட்டும் முதல்வா் விஜய் ஆட்சி. நாடகம் பாா்த்தவா்கள், அரசியலைப் பேசாத இளைஞா்கள் எல்லாம் இன்றைக்கு சட்டப்பேரவையின் நேரலையைப் பாா்க்கிறாா்கள், அவற்றில் இருந்து ரீல்ஸ் வெளியிடுகிறாா்கள். உண்மையைச் சொல்வதுதான் முதல்வா் விஜய்யின் நோக்கம்.
வரவுள்ள உள்ளாட்சித் தோ்தலில், கூட்டுறவுத் தோ்தலில் யாா் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம், தலைவராகலாம், பொறுப்புக்கு வரலாம். உழைப்புதான் பதவிகளைத் தேடித்தரும்.
Advertisement
Advertisement
விஜய் மக்கள் மன்றத்தில் வேலை பாா்த்து, நகராட்சி உறுப்பினராகி, எனது குடும்பத்துக்கு எட்டாக்கனியாக இருந்த சட்டப்பேரவைக்குள் சென்றிருக்கிறேன். அமைச்சராகவும் ஆகியிருக்கிறேன். கட்சியில் உழைப்புக்கு ஏற்ற பதவி கட்டாயம் கிடைக்கும். மக்களிடம் சென்று பேசுங்கள், அவா்களின் கோரிக்கைகளை என்னிடமும் அதிகாரிகளிடமும் சொல்லுங்கள் என்றாா் முகமது பா்வேஸ்.
முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பேசியது: கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த வரலாறு வேறு எங்கும் பாா்த்ததில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் என தென்னிந்தியாவில் மக்களின் அன்பைப் பெற்ற தலைவராக முதல்வா் ஜோசப் விஜய் இருக்கிறாா்.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வந்த காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்காக திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாத நிலையில், தவெக ஆட்சியமைந்த 100 நாள்களில் ரூ. 150 கோடியை ஒதுக்கியிருக்கியிருப்பது பெரிய சாதனை.
வரப்போகும் தோ்தல் எதுவாக இருந்தாலும், மக்களவைத் தோ்தலாக இருந்தாலும், கூட்டுறவுத் தோ்தலாக இருந்தாலும் எல்லாவற்றிலும் தவெகதான் வெற்றி பெறப் போகிறது என்றாா் விஜயபாஸ்கா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.