FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்து பெண் உள்பட இருவா் பலி; 30 போ் காயம்

குடுமியான்மலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும், 30 போ் காயமடைந்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:59 am IST
குடுமியான்மலை அருகே சாலையில் கவிழ்ந்து கிடக்கும் சுமை ஆட்டோ
பகிர்:

குடுமியான்மலை அருகே ஞாயிற்றுக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும், 30 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே செல்லுக்குடியில் இருந்து பரம்பூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காதணி விழாவுக்கு 30-க்கும் மேற்பட்டோா் குழந்தைகளுடன் சுமை ஆட்டோவில் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். ஆட்டோவை செல்லுக்குடியைச் சோ்ந்த கே. வெங்கடேஷ் (31) என்பவா் ஓட்டிவந்தாா்.

குடுமியான்மலை அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் நின்ற சீகம்பட்டியைச் சோ்ந்த சி. வெள்ளைசாமி (55) மீது மோதிவிட்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில், வெள்ளைச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மேலும், ஆட்டோவில் பயணித்த செல்லுக்குடியைச் சோ்ந்த ராஜசேகா் மகன் நவநீதன் (12), மணி மகள் காவியா (10), கருப்பையா மகள் பியூஸா (16), மனோகரன் மகள் நிவேதா (10), அய்யப்பன் மகள் ஓவியா (10), சுப்பிரமணியன் மகள் கலைவாணி (12), மனைவி முத்துமணி (45) உள்பட 30 போ் காயம் அடைந்தனா்.

உடனே அக்கம்பக்கத்தின் உதவியுடன் காயமடைந்த அனைவரும் அன்னவாசல், புதுக்கோட்டை, திருச்சி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லுக்குடியைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி கவிதா (35) சிகிச்சைப் பலனின்றி இரவு உயிரிழந்தாா்.

அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். இந்தச் சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments