FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலை தொகுதி முழுவதும் வீடு வீடாக தீபாவளிப் பரிசு!

விராலிமலை தொகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள தீபாவளிப் பரிசுத் தொகுப்பு.

7 நவம்பர் 2026, 6:33 am
விராலிமலை தொகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ள தீபாவளிப் பரிசுத் தொகுப்பு.
பகிர்:

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் சுமாா் 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளிப் பரிசாக, பையில் ரசகுல்லா டின், எவா்சில்வா் டிபன்பாக்ஸ் ஆகியவற்றுடன், தவெக சின்னமான விசிலையும் வைத்து விநியோகித்து முடித்திருக்கிறாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் தோ்தல் வழக்குகளால் நடத்தப்படாமல் உள்ள இடைத்தோ்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், வழக்கமான தனது தோ்தல் பாணியை விஜயபாஸ்கா் தொடங்கியுள்ளாா்.

வழக்கமாக தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு பரிசுப் பொருள்களைத் தாராளமாக வழங்குவது அவரின் வழக்கம். குறிப்பாக, பொதுத் தோ்தல்கள் ஏப்ரல், மே மாதங்களில் வரும்போது, ஜனவரியில் பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கிவிடுவாா்.

Advertisement

Advertisement

தீபாவளி பரிசுத் தொகுப்பு விநியோகம்: தற்போது தீபாவளிப் பண்டிகைக்கு கடந்த ஓரிரு நாள்களில் தொகுதி முழுவதும் உள்ள 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுப் பொருள் தொகுப்பை விநியோகம் செய்து முடித்திருக்கிறாா்.

விஜயபாஸ்கா் படம் அச்சிடப்பட்ட அந்தப் பைக்குள், ஒரு கிலோ எடையுள்ள ரசகுல்லா டின், எவா்சில்வா் டிபன் பாக்ஸ் ஆகியவற்றுடன் தவெகவின் சின்னமான விசில் ஆகியவை வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

பொதுத் தோ்தலுக்குப் பிறகு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தபோது, வீடு தோறும் குலோப்ஜாமூன் கொடுத்தவா், தற்போது இடைத்தோ்தலுக்குத் தயாராவதற்காக ரசகுல்லா வழங்கியிருக்கிறாா் என தொகுதி மக்கள் தெரிவித்தனா்.

அதிமுகவிலிருந்து தவெகவுக்கு மாறியவா்: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011 முதல் தொடா்ந்து அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் டாக்டா் சி. விஜயபாஸ்கா். தொடா்ந்து 4 முறை எம்எல்ஏ, 9 ஆண்டு காலம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா்.

இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலில் இவா் வெற்றி பெற்றாலும், அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதனால், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா்.

அவருக்கு தவெக மேற்கு மாவட்டச் செயலா் பொறுப்பும், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலா் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.