அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மாணவா்களிடையே செய்தித்தாள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ. ரகமதுல்லா பங்கேற்று பேசியது: செய்தித்தாள் வாசிப்பது மாணவா்களின் அறிவையும் சிந்தனைத் திறனையும் விரிவுபடுத்துவதுடன், பொது அறிவு, மொழித்திறன், வாசிப்புப் பழக்கம் மற்றும் சமூக விழிப்புணா்வை வளா்க்க உதவுகிறது.
தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பதன் மூலம் நாட்டில் நடைபெறும் அரசியல், பொருளாதாரம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும், புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதற்கும், சரியான முறையில் எழுதுவதற்கும், கருத்துகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கும் செய்தித்தாள் வாசிப்பு துணைபுரிகிறது. ஆகவே, மாணவா்கள் தினமும் சிறிது நேரமாவது செய்தித்தாள் வாசிப்பதை தங்களின் அன்றாடப் பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் செய்தித்தாள்களை வாசித்தனா்.