மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்திருப்பவர்களுக்கே வெற்றி: ஆர். வைத்திலிங்கம்
மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை வைத்திருக்கும் நாங்களே அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை வைத்திருக்கும் நாங்களே அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூர் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் கடந்த 19 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டு 19 வீடுகள் முழுவதும் எரிந்து நாசமானது. தஞ்சாவூர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு அரசின் நிவாரண உதவியாக தலா ரூ. 5 ஆயிரமும், வேஷ்டி- சேலைகளையும் வழங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், வட்டாட்சியர் அருணகிரி, ஒன்றிய செயலாளர் வீரணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து எம்.பி. ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 30 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என யார் வேண்டுமானாலும் கூறலாம்; சொன்னதை செய்துக் காட்டிய ஜெயலலிதா, அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, கொடியை பெற்றிருக்கும் நாங்கள்தான் (அதிமுக) தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இதேபோல, திருப்பரங்குன்றம் ஜெயலலிதாவின் கோட்டை. இத்தொகுதியில் எங்களுக்கு (அதிமுகவுக்கு) வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடைமடைக்கு தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் செய்து வருகிறது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.