ராசிமணலில் அணை கட்ட கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும்: பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு அறிவிக்க வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காவிரியில் தமிழகத்துக்கு 310 டி.எம்.சி. நீரை விடுவித்து விட்டதாகவும், அதைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், உபரி நீரைக் கடலில் கலக்க விட்டு வீணாக்கிவிட்டதாகவும் கர்நாடக அரசுச் செயலர் சிங் உண்மைக்குப் புறம்பாகப் கூறியுள்ளார்.
பேரிடர் காலத்தில் வரும் வெள்ளத்தைத் தேக்கி வைக்கத் தமிழகத்தில் இடமில்லை. இதைத் தேக்கி வைக்க உள்ள ஒரே இடம் ராசிமணல்தான். அங்கு தமிழகம் அணை கட்டிக் கொள்வதற்கு கர்நாடக அரசு தடை விதிக்கக் கூடாது.
தமிழக அரசும் ராசிமணலில் அணைக் கட்டுவதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளோம்.
முக்கொம்பில் மேலணையில் மணல் மூட்டைகளைப் போட்டுத் தடுப்பது பேராபத்தை ஏற்படுத்தும்.
மேலும், அது பயனளிக்காது என்பதால், இரும்புத் தூண்களை வைத்து தற்காலிக கதவுகளை அமைக்க வேண்டும்.
மத்திய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 200 மட்டுமே உயர்த்தி ஏமாற்றத்தை அளித்தது. எனவே, தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 400 அறிவிக்க வேண்டும்.
தற்போது விவசாயப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் மேட்டூர் அனையில் பாசன தண்ணீரின் அளவைக் குறைப்பதால் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கல்லணையில் 5 நாள் முறைப்பாசனம் அமல்படுத்தி முழு அளவுத் தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்றார் பாண்டியன். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் த. புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் துரை. பாஸ்கரன், மாவட்டச் செயலர் மணி, மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.