நிவாரணம் கோரி சாலை மறியல்
தஞ்சாவூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் கொடுக்கப்படும் தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இதனால், நாஞ்சிக்கோட்டை சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சூரக்கோட்டை: இதேபோல, தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் சூரக்கோட்டை பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், இயக்கத்தின் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர்.
ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே நிவாரணப் பொருட்கள் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் கஜா புயல் தாக்கி 31 நாட்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒரத்தநாடு - மன்னார்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியலைக் கைவிட்டுச் சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.