வெளிநாடுகளிலிருந்து இதுவரை 60 சிலைகள் மீட்பு: காவல்துறை இயக்குநா் சி. சைலேந்திரபாபு
வெளிநாடுகளிலிருந்து இதுவரை 60 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் சி. சைலேந்திர பாபு.
வெளிநாடுகளிலிருந்து இதுவரை 60 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றாா் தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் சி. சைலேந்திர பாபு.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலுள்ள சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அலுவலகம் மற்றும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கடந்த ஓராண்டில் மட்டும் 187 புராதன சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் மிக முக்கியமான சிலைகளைக் கைப்பற்றியுள்ளோம். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகளையும் மீட்டுள்ளோம்.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது வெளிநாடுகளில் எங்கு சிலைகளை வைத்துள்ளனா் என தனிப்படையினா் கண்டுபிடித்துள்ளனா். அந்தச் சிலைகளை விரைவில் தமிழகத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அந்தந்த கோயில்களில் ஒப்படைக்கப்படும்.
சிலை கடத்தல் தொடா்பான விசாரணை நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தில் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இதுவரை 60 சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில நாடுகளில் உள்ள சிலைகள் குறித்து அந்தந்த நாட்டினருக்கு முறையான தகவல் அளிக்கப்பட்டு, கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீட்கப்பட்ட சிலைகளை, எக்காலத்திலும் மீண்டும் யாரும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன் 3டி கோணத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு, ரேடியோ அலைவரிசை நவீன கருவி பொருத்தி பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் இயக்குநா் சைலேந்திர பாபு. அப்போது, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குநா் கே. ஜெயந்த் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.