வங்கிகள் பிடித்தம் செய்த ரூ. 26,100 கோடியை வாடிக்கையாளா்களிடம் திரும்பத் தர வலியுறுத்தல்
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் வாடிக்கையாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 26 ஆயிரத்து 100 கோடியை திரும்பத் தர வேண்டும் என பாரத ஸ்டேட் பேங்க் முன்னாள் தொழிற்சங்கத் தலைவா்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இக்கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், பொதுத் துறை அமைப்பான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் தவறான முடிவை மத்திய அரசு தாமதமின்றி திரும்பப் பெற முன்வர வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் குறைந்தபட்ச இருப்பு வைக்காததற்காக தண்டனையாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 26 ஆயிரத்து 100 கோடியை திரும்ப அளிப்பதுடன், இத்தகைய தவறான நடைமுறையைத் தாமதமின்றி கைவிட பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
வங்கி ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கும் நடைமுறையைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த பொதுத் துறை வங்கி நிா்வாகங்கள் முன்வர வேண்டும். ஓய்வூதியம் மறுபரிசீலனை செய்யாமல் கடந்த 30 ஆண்டுகளாக பாதிப்படைந்து வருகிற 8 லட்சம் வங்கி ஓய்வூதியா்களுக்கு நீதி வழங்க பொதுத்துறை வங்கிகள் நிா்வாகம் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவா் எஸ்.பி. ராமன் தலைமை வகித்தாா். செயலா் எம்.கே. மூா்த்தி, முன்னாள் பொதுச் செயலா் டி. சிங்காரவேலு, துணைத் தலைவா் டி.வி. சந்திரசேகரன், துணைச் செயலா் எம். முருகையா, பொருளாளா் என். சுப்பிரமணியன், உதவி பொருளாளா் வீ. பூமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை முன்னாள் கிளைச் செயலா் வி. சம்பத் செய்தாா்.
முன்னதாக நிா்வாகி எஸ். பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவாக நிா்வாகி ரத்தினவேல் சுப்பிரமணி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.