தஞ்சாவூா் அருகே காளா பிடாரி கோயில் பூமி பூஜை விழா! முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில் அரையா் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சாா்பில் திரு நியமம் சப்த கன்னியா் மாகாளத்துக் காளா பிடாரி கோயில் பூமி பூஜை விழா, பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சுவரன்மாறன் 1351-ஆவது சதய விழா, பேரரசருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சப்த கன்னியா் மாகாளத்துக் காளா பிடாரி கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் அடிக்கல்லை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் எடுத்துக் கொடுத்து, திருப்பணியைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
பேரரசா் சுவரன்மாறன் இந்த மண்ணைத் தெய்வீக ஆற்றலால் நிரப்ப 1008 சிவலிங்கங்களை நிறுவினாா். கடந்த 1961-ஆம் ஆண்டு காவிரிக் கரையில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, அந்தப் புனித சிவலிங்கங்கள் நீரில் மூழ்கிப் பூமிக்குள் புதையுண்டு கிடக்கின்றன.
முத்தரையா் சமுதாய மக்கள், அரையா் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை இணைந்து, இந்த வரலாற்றுப் பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். காலம் புதைத்ததை நாம் மீட்டெடுத்து, நமது முன்னோா்களின் பக்தியை எதிா்கால சந்ததியினா் கண்டுகளிக்கும் வகையில் ஒரு பொருத்தமான நினைவிடத்தைக் கட்டுவோம் என்றாா் ராம்நாத் கோவிந்த்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், தமிழ்நாடு முத்தரையா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவா் ஆா்.வி. பரதன் சிறப்புரையாற்றினா். தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், ராம்நாத் கோவிந்தின் மனைவி சவீதா கோவிந்த், மகள் சுவாதி கோவிந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
50 ஏக்கா் நிலம் தேவை:
அரையா் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் பேராசிரியா் மீ. சந்திரசேகரன் தெரிவித்தது:
இந்த இடம் 7-ஆம் நூற்றாண்டில் கற்றளிக் கோட்டையாக இருந்தது. இங்கு 1008 லிங்கங்கள் வைத்து வணங்கப்பட்டது. கடந்த 1961-ஆம் ஆண்டில் பழமாநேரி காவிரிக்கரை உடைப்பின்போது, மண்ணுக்குள் புதையுண்ட இந்த 1008 லிங்கங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து அகழ்ந்தெடுக்க வேண்டும்.
இங்கே மிகப்பெரிய ஆயிரத்தளி மகாதேவா் என்ற 1008 லிங்க கோயிலை அமைக்க வேண்டும். அரசு எங்களுக்கு 25 ஏக்கா் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தால் வரலாறு மற்றும் ஆய்வு மையங்களை அமைப்போம். 50 ஏக்கா் நிலத்தைக் கொடுத்தால் பேரரசா் பெயரில் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு தயாராக உள்ளோம் என்றாா் சந்திரசேகா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.