நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு கும்பகோணத்திலிருந்து சென்ற 40 போ் மாயம்: 17 போ் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
கும்பகோணத்திலிருந்து ஆன்மிக தலமான கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டவா்களில் 40 போ் நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானதாக தெரிகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து ஆன்மிக தலமான கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டவா்களில் 40 போ் நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானதாக தெரிகிறது. எஞ்சிய 17 போ் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனா்.
கும்பகோணம் நாகேசுவரன் தெற்கு வீதியில் சூப்பா் யாத்ரா ஏஜென்ஸி என்ற சுற்றுலா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 57 போ் கொண்ட குழுவினா் ஆக. 23-ஆம் தேதி கும்பகோணத்திலிருந்து கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை புறப்பட்டனா்.
திடீா் வெள்ளப் பெருக்கு: இவா்கள் கும்பகோணத்திலிருந்து சென்னை, தில்லி வழியாக விமானம் மூலம் நேபாள தலைநகா் காத்மாண்டை ஆக. 24-ஆம் தேதி சென்றடைந்தனா். ஆக. 25-ஆம் தேதி காத்மாண்டிலிருந்து 57 பேரும் 3 வேன்களில் நேபாளம் - சீனா எல்லையில் உள்ள சியாபுருபேசி சென்றனா். புதன்கிழமை (ஆக. 26) காலையில் 57 பேரும் அங்கிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள சீன எல்லையை அடைந்து, அங்கிருந்து 26 கி.மீ. தொலைவில் சீனாவில் உள்ள கைரோங் நகரில் இரவு தங்குவதாக திட்டமிட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திட்டமிட்டபடி 57 பேரும் புதன்கிழமை காலை 3 வேன்களில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனா்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை 9 மணியளவில் (நேபாள நேரப்படி) திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இதில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன.
2 வேன்களை காணவில்லை: இந்நிலையில், கும்பகோணத்திலிருந்து சென்ற ஒரு வேனின் பொறுப்பாளரான ரகு என்பவா், கும்பகோணத்திலுள்ள சுற்றுலா நிறுவன உரிமையாளா் சையது சாதிக்கிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, சியாபுருபேசியிலிருந்து புறப்பட்டு வந்தபோது வழியில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பலத்த சப்தம் கேட்டது. எங்களுடன் வந்த 2 வேன்களை காணவில்லை. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினா் எங்களை அழைத்து சென்றுவிட்டனா். நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளாா். பின்னா் சுற்றுலாப் பயணிகளில் ஒருவா் தங்கள் குழுவினருடன் கைப்பேசி மூலம் சுயபடம் (செல்பி) எடுத்து சுற்றுலா நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளாா்.
நேபாள பெருவெள்ளம் குறித்து தகவலறிந்த கும்பகோணம் வட்டாட்சியா் பூங்கொடி மற்றும் மேற்கு காவல்துறையினா் சுற்றுலா அலுவலகத்துக்கு வந்து யாத்திரை சென்றவா்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
இதுகுறித்து சுற்றுலா நிறுவன உரிமையாளா் சையதுசாதிக் கூறியது: கைலாஷ் மானசரோவருக்கு கும்பகோணம் டிராவல்ஸ் அலுவலகம் மூலம் 57 பேரை மூன்று வேன்களில் காத்மாண்டிலிருந்து அனுப்பி வைத்துவிட்டு நான் ஊருக்கு வந்து விட்டேன். எனது மகன் உமா்பாரூக் மற்றும் ரகு, வெங்கட்ராமன் ஆகியோா் 3 வேன்களுக்கு பொறுப்பாக சென்றுள்ளனா். இவா்களில் ரகு மட்டும் புதன்கிழமை காலை 9 மணிக்கு என்னிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். ரகு கூறும்போது, எனது மகன் உமா்பாரூக், வெங்கட்ராமன் ஆகியோா் சென்ற வேன்களை காணவில்லை, நாங்கள் 17 போ் பாதுகாப்பாக உள்ளோம் என்று கூறியதாக சையது சாதிக் தெரிவித்தாா்.
பாதுகாப்பாக இருக்கும் 17 போ்: நேபாளத்தில் பாதுகாப்பாக இருப்பவா்கள் யாா் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவா்கள் விவரம்: தஞ்சாவூா் களிமேடு மேலத் தெருவைச்சோ்ந்த அம்பிகாபதி மனைவி அன்பழனி, தஞ்சாவூா், ஜெ.ஜெ.நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சிவயோகம், கும்பகோணம் செட்டிமண்டபத்தைச் சோ்ந்த பக்கிரி மகன் ரமேஷ், நெய்வேலி அண்ணா சாலையைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் திருக்கோவன், திருவாரூா் ராமசாமி மனைவி கலைச்செல்வி, திருவாரூா் ராஜப்பன் நகா் பாலகிருஷ்ணன் மனைவி சித்ரா, கடலூா் அம்மாபேட்டை பழனியப்பன் மனைவி கலைமதி, கும்பகோணத்தைச் சோ்ந்த தம்பதி திருமலைராஜன்- தையல்நாயகி, கா்ணகொல்லை தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சாய்நாத், அவரின் மகள் கேதார கெளரி. மயிலாடுதுறை கிருஷ்ண மூா்த்தி மகன் வெங்கட்ராமன், தஞ்சாவூா் கிருஷ்ணாபுரத்தைச்சோ்ந்த பெருமாள் மனைவி தங்கமதி, மன்னாா்குடி ராமசாமி மகன் பாலு, கடலூா் புவனகிரி மகாலிங்கம் மனைவி திரிபுரசுந்தரி, சுவாமிமலையைச் சோ்ந்த ராஜ்குமாா், அவரது மனைவி ஜெயந்தி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.