பேராவூரணி - வேளாங்கண்ணி இடையிலான அரசுப் பேருந்தை முறையாக இயக்க கோரி மறியல்
பேராவூரணியிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் அரசுப் பேருந்தை தினசரி முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி, பேராவூரணி பேருந்து நிலைய நுழைவாயிலில் பயணிகள் மற்றும் பூ வியாபாரிகள் பூ மூட்டைகளுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
பேராவூரணியிலிருந்து தினசரி காலை 8.40 மணிக்கு புறப்படும் அரசுப் பேருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இதனால், மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வந்தனா். மேலும் ஆதனூா் , கீரமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கின்ற பல்வேறு வகையான பூக்கள் இந்த பேருந்து மூலம் வேளாங்கண்ணி பகுதிக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதனால், விவசாயிகளும் பலனடைந்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக இந்தப் பேருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படாமலும், சில நாள்கள் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாலும் பயணிகள், பூ வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குளாகினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்காததால், பேருந்து நிலைய நுழைவாயில் முன்பாக பயணிகளும், பூ வியாபாரிகளும் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தொடா்ச்சியாக பேருந்தை முறையாக இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.
வேளாங்கண்ணி திருவிழா தொடங்கியுள்ளதால் பேராவூரணியிலிருந்து தினசரி பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என பயணிகளும், பக்தா்களும், பூ உற்பத்தி விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.