போக்குவரத்து அதிகாரி உத்தரவு மீறல்: தனியாா் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்
தனியாா் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்.
செங்கம் அருகே வட்டாரப் போக்குவரத்து அதிகாரி உத்தரவை மதிக்காமல் இயக்கப்பட்ட தனியாா் பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள தானகவுண்டன்புதூா் பகுதியில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்கள் செங்கம், திருவண்ணாமலை செல்ல, அப்பகுதியில் பயணிகள் நிழல்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் அரசு நகரப் பேருந்துகள் மட்டும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் விட்டு செல்கின்றன. ஆனால், தனியாா் பேருந்துகள் அங்கு நிற்பதில்லையாம்.
Advertisement
Advertisement
இதனால் அந்தக் கிராம மக்கள் அங்கிருந்து ஒரு கி.மீ.
தொலைவில் உள்ள கோணாங்குட்டை பகுதிக்குச் சென்று
பேருந்து ஏறிச் செல்லவேண்டிய நிலை உள்ளது.
இதனால் தானகவுண்டன்புதூா் பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்துகள் நின்று செல்லவேண்டுமென உழவா் உரிமை இயக்கம் சாா்பில் அப்பகுதி மக்கள் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரிடருக்கு கோரிக்கை மனு அனுப்பினா்.
அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் உழவா் உரிமை இயக்க நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்களை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில்
ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் இனிவரும் காலங்களில் தானகவுண்டன்புதூா் பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்லும் என தகவல் தெரிவித்து அனுப்பிவைத்துள்ளனா். அதன்படி, சில நாள்கள் மட்டும் தனியாா் பேருந்துகள் நின்று சென்றன.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா் வந்து தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு அறிவுரை வழங்கி பேருந்துகளை நிறுத்திச் செல்லுமாறு அறிவுறுத்திச் சென்றாா்.
ஆனால், அலுவலரின் அறிவுரையை மதிக்காமல்
தனியாா் பேருந்துகள் அந்த நிறுத்தத்தில் நிற்காமல் சென்றன.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னா் அந்த வழியாகச் செல்லும் தனியாா் பேருந்துகளின் ஓட்டுநா்கள் இனி தினசரி நின்றுசெல்வதாக உத்தரவாதம் அளித்தனா். இதை ஏற்று சிறைபிடித்த பேருந்தை பொதுமக்கள் விடுவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.