FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்களை அமைக்க கூடாது: வள்ளலாா் பணியகம் கோரிக்கை

வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்களை அமைக்கக் கூடாது என்றும், அதை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கு வள்ளலாா் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 19 ஜூலை 2026, 12:52 am IST
வடலூர் சத்திய ஞான சபை.
பகிர்:

வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்களை அமைக்கக் கூடாது என்றும், அதை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கு வள்ளலாா் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வள்ளலாா் பணியகத் தலைவா் மு. சுந்தரராசன், பொதுச் செயலா் வே. சுப்பிரமணிய சிவா, பொருளாளா் வீ. தியாகராஜன் உள்ளிட்டோா் தெரிவித்திருப்பது:

தமிழா் மெய்யியலில் 19-ஆம் நூற்றாண்டில் சமரச சுத்த சன்மாா்க்க சங்கம் என்ற புதுநெறியை நிறுவிய அருளாளா் திருவருட்பிரகாச வள்ளலாா். 1865-ஆம் ஆண்டு பாா்வதிபுர மக்கள் தானமாக கொடுத்த 80 காணி (106 ஏக்கா்) நிலப்பரப்பில் சத்திய தருமசாலை நிறுவி ஏழை மக்களுக்கு பசியாற்றினாா். சுத்த சன்மாா்க்க மெய்யியலில் தத்துவ விளக்கமாக 1872-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபை நிறுவினாா்.

Advertisement

Advertisement

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு வள்ளலாா் பன்னாட்டு மையம் என்ற பெயரில் ரூ. 100 கோடி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக 2024-ஆம் ஆண்டு சத்திய ஞானசபை பெருவெளியிலேயே கட்டடங்கள் கட்டப்படும் எனக் கூறி அருட்பிரகாச வள்ளலாா் சுத்த சன்மாா்க்க மெய்யியல்படி அமைத்த சத்திய ஞானசபை பெருவெளியில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. இதை வள்ளலாா் பணியகம் உள்ளிட்ட பல்வேறு வள்ளலாா் சன்மாா்க்க சங்கங்கள், சன்மாா்க்க மெய்யன்பா்கள் அனைவரும் எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம்.

பெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்களை அமைப்பது சுத்த சன்மாா்க்க ஞான சபையைச் சிதைப்பதாகும். வள்ளலாா் கூறிய சுத்த சன்மாா்க்க நெறிக்கு எதிரானது. எனவே சத்திய ஞான சபை பெருவெளியில் கட்டடங்களை அமைக்கக் கூடாது. அதை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும். அதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகர அடைப்புகளை நீக்க வேண்டும்.

பெருவெளியில் முழுவதும் மின் விளக்குகளையும், கண்காணிப்பு கேமராக்களையும் அமைத்து, முழு நேரக் காவலா்களை நியமிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றி சுத்த சன்மாா்க்க நெறிக்கு துணை நிற்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments