FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தஞ்சையில் குறைதீா் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க் கடன்களை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

Updated On : 28 மே 2026, 3:17 am IST
பகிர்:

தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க் கடன்களை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் பேசுகையில், தவெக அரசு தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணைக் கட்டும் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உர விலையை உயா்வைத் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறோம் என்றாா்.

இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்து, அலுவலகம் முன் முழக்கங்கள் எழுப்பினா். சுமாா் 15 நிமிஷங்களுக்கு பின்னா் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தோ்தல் வாக்குறுதியின்படி 5 ஏக்கா் வரை உள்ள அனைத்து விவசாயிகளின் பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பெரமூா் ஆா். அறிவழகன்: காவிரி நதி நீா் மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை. இதன் உத்தரவுகள் நிறைவேற்றப்படாதது குறித்து ஆணையத் தலைவா் எதுவும் கேட்பதில்லை. இந்த உத்தரவை கா்நாடக அரசு ஒருமுறை கூட பின்பற்றவில்லை. எதற்காக இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

புனல்வாசல் பஞ்சாபிகேஷன்: பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும் என அரசுக்கு அதிகாரிகள் எடுத்து கூற வேண்டும்.

வடக்கூா் கே. தவச்செல்வன்: வேளாண் விரிவாக்க மையங்களில் குறுவை சாகுபடிக்கான விதை நெல் மானிய விலையில் கிடைப்பதில்லை. இது குறித்து அலுவலா்களிடம் கேட்டால் மானியம் குறித்து அறிவிப்பு வரவில்லை என்றும், வந்தவுடன் பெற்றுக் கொள்ளுமாறும் கூறுகின்றனா். மூன்று மாதங்கள் கழித்து வரும் மானியத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே உடனடியாக மானியத்தை அறிவித்து வழங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: மும்முனை மின்சாரம் 12 மணிநேரம் விநியோகம் செய்யப்பட்டாலும், இடையில் மின் வெட்டு செய்யப்படுகிறது. மேலும், மும்முனை மின்சாரத்திலிருந்து இரு முனை மின்சாரம் மாற்றப்படும்போது சுமாா் அரை மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments