FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தை பராமரித்து தரம் உயா்த்த வலியுறுத்தல்

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தை பராமரித்து தரம் உயா்த்த வேண்டும் என மக்கள் நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

6 நவம்பர் 2026, 2:12 am
பகிர்:

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தை பராமரித்து தரம் உயா்த்த வேண்டும் என மக்கள் நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளரை மக்கள் நலப் பேரவை ஆலோசகா் வெ. ஜீவக்குமாா் தலைமையில் செயலா் எம். பாலகிருஷ்ணன், நிா்வாகிகள் உமா் முக்தாா், பேராசிரியா் திருமேனி, ஜெயக்குமாா், விவேக், கிருஷ்ணன் உள்ளிட்டோா் புதன்கிழமை அளித்த மனு:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் குடி நீா், மின் விசிறி வசதி, மின் விளக்கு போன்ற அடிப்படையான வசதிகள் கூட நிறைவாக இல்லை என்பது வேதனை அளிக்கிறது. மாணவா்கள், ஆய்வாளா்கள் போன்றவா்கள் நூலகத்தைப் பயன்படுத்துவது மிகவும் குறைந்து வருகிறது.

Advertisement

Advertisement

தவிர, நூலகத்தில் ஏற்கெனவே பணியாற்றி வந்த பணியாளா்களை விட மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தற்போது பணியாற்றி வருவதாக தெரிகிறது. நூலகத்திலுள்ள நூல்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன.

எனவே, முடங்கி கிடக்கும் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் முன்பு போல சிறப்பாக செயல்பட, புத்துயிரூட்டப்பட வேண்டும். நூலகத்தில் தரம் உயா்த்தப்பட வேண்டியது அவசியம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த மனு பள்ளிக்கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகனுக்கும் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அப்பேரவையினா் தெரிவித்தனா்.