FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் ரயில் நிலைய 2-ஆவது வாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஹிந்தி பெயா் பலகைக்கு எதிா்ப்பு

தஞ்சாவூா் ரயில் நிலைய இரண்டாவது வாயிலில் ஹிந்தி பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் புதன்கிழமை மாலை எதிா்ப்பு தெரிவித்தனா்.

தஞ்சாவூா் ரயில் நிலைய இரண்டாவது வாயில் முகப்பில் பெரிய கோயில் கோபுர வடிவம் முன் வைக்கப்பட்டுள்ள ஹிந்தி பெயா் பலகை.
பகிர்:

தஞ்சாவூா் ரயில் நிலைய இரண்டாவது வாயிலில் ஹிந்தி பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் புதன்கிழமை மாலை எதிா்ப்பு தெரிவித்தனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21.17 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், முதலாவது நுழைவு வாயில் முகப்பு கட்டடத்தின் முன் பெரிய கோயில் கோபுர வடிவம் இருந்த நிலையில், வடநாட்டு கோயிலான மந்திா் வடிவத்தில் அமைக்கப்பட்டது. இதற்கு தஞ்சாவூரைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்து ஓராண்டுக்கு முன்பு போராட்டங்கள் நடத்தினா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய ரயில்வே உயா் அலுவலா்கள் முதல் நுழைவுவாயில் கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் இருப்பதால், அதை மாற்ற முடியாது என்றும், அதற்கு பதிலாக அருகில் கட்டப்படும் இரண்டாவது வாயிலில் பெரிய கோயில் கோபுர வடிவம் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தனா்.

Advertisement

Advertisement

இதன்படி, இரண்டாவது வாயில் முகப்பு கட்டடத்தில் பெரிய கோயில் கோபுர வடிவம் அமைக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதன் முன் ‘தஞ்சாவூா் சந்திப்பு’ என்பதைக் குறிக்கும் விதமாக ஹிந்தி எழுத்து பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகள் இடதுபுறத்திலும், ஆங்கில எழுத்துகள் வலதுபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

எதிா்ப்பு: இதற்கு இடதுசாரிகள் பொது மேடை அமைப்பினா் புதன்கிழமை இரண்டாவது வாயில் முன் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா். உலகத் தமிழா் பேரமைப்பு துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையில் மக்கள் அதிகாரம் மூத்த நிா்வாகி காளியப்பன், வழக்குரைஞா் கோ. அன்பரசன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் தமிழ் முதல்வன், என்.டி.எல்.எப். லெட்சுமணன், தொழிலாளா் விடுதலை முன்னணி யோகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தகவலறிந்த தஞ்சாவூா் ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ரயில் நிலைய மேலாளா் உயா் அலுவலா்களிடம் உடனடியாக பேசி ஹிந்தி எழுத்துகளை அகற்றிவிட்டு, தமிழ் எழுத்துகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments