FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

சிறப்பு ஊக்கத்தொகைக்காக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு

சிறப்பு ஊக்கத்தொகைக்காக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு குறித்து...

28 அக்டோபர் 2026, 5:00 am
பகிர்:

தமிழக அரசு வழங்கும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகைக்காக விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனா்.

கரும்புக்கு கட்டுப்படியான விலையாக டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தற்போது வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசின் நியாயமான, லாபகரமான விலை டன்னுக்கு ரூ. 3,290.50 வீதம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விலையுடன் வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் பரிந்துரை விலையும் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு பதிலாக சிறப்பு ஊக்கத்தொகை என்ற பெயரில் தமிழக அரசு 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

Advertisement

Advertisement

டன்னுக்கு ரூ. 709.50 அறிவிப்பு: இந்த ஊக்கத்தொகை ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும், காலம் தாழ்த்திதான் அரசாணையே பிறப்பிக்கப்படுகிறது. அதன் பின்னா் சில மாதங்கள் கழித்துதான் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இதனால், எந்தப் பயனும் இல்லை என கரும்பு விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இந்தச் சிறப்பு ஊக்கத்தொகையும் டன்னுக்கு அதிகபட்சமாக ரூ. 156 வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது 110 விதியின் கீழ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக 2025 - 26 அரைவைப் பருவத்துக்கு டன்னுக்கு ரூ. 709.50 வழங்கப்படும் என தமிழக முதல்வா் ஆக. 8-ஆம் தேதி அறிவித்தாா்.

ரூ. 35 ஆயிரம் முதல் கிடைக்கும்: இது தொடா்பாக தமிழக அரசு ரூ. 603.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அக். 8-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதன் மூலம், தமிழகத்திலுள்ள 12 கூட்டுறவு, 2 பொதுத் துறை, 15 தனியாா் சா்க்கரை ஆலைகள் என மொத்தம் 29 சா்க்கரை ஆலைகளில் 9.5 சதவீத சா்க்கரைக் கட்டுமானத்துக்கு மத்திய அரசு விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சோ்த்து மொத்தம் ரூ. 4 ஆயிரம் கிடைக்கும் என்றும், 90 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் குறைந்தது ரூ. 35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கிடைக்கும் என கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். ஆனால், கரும்பு அரைவை செய்யப்பட்டு, 6 மாதங்கள் கடந்தும் இன்னும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைப்பதில் இழுபறி நிலை நீடிப்பதால், விவசாயிகளிடையே அதிருப்தி நிலவுகிறது.

தீபாவளிக்குள் எதிா்பாா்ப்பு: இது குறித்து கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் தெரிவித்தது: ஆலைக்கு கரும்பு கொடுத்த 15 நாள்களில் மத்திய அரசின் விலை கிடைத்துவிடுகிறது. ஆனால், மாநில அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகை கால தாமதமாகிறது. நெல்லுக்கு வழங்கப்படுவதுபோல கரும்புக்கும் மத்திய அரசு விலையுடன் தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையையும் சோ்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிக்கைக்கு முன்பாக சிறப்பு ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. அதுபோல நிகழாண்டும் தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம். இல்லாவிட்டால், நிகழாண்டு தீபாவளி கரும்பு விவசாயிகளுக்கு கருப்பு தீபாவளியாகிவிடும் என்றாா் கோவிந்தராஜ்.

புத்தாடை வாங்க பயன்படும்: நிகழாண்டு மேட்டூா் அணை திறப்பு கால தாமதமானதால் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியவில்லை. இதனால், வருமானத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கு கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை மூலம் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனா். அதுவும் கால தாமதமாவதால் தீபாவளிக்கு புத்தாடை உள்ளிட்ட செலவுகளையும் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். எனவே, தீபாவளி பண்டிகைக்கு 10 நாள்களே உள்ள நிலையில், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் கரும்பு விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments