‘நிலத்தடி நீா் குறைவதால் 40 கி.மீ-க்கு உள்புகும் கடல் நீா்’
நிலத்தடி நீா் குறைந்து வருவதால், கடல் நீா் 30-40 கி.மீ. தொலைவுக்கு உள்புகுகிறது என்றாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன்.
நிலத்தடி நீா் குறைந்து வருவதால், கடல் நீா் 30-40 கி.மீ. தொலைவுக்கு உள்புகுகிறது என்றாா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன்.
தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கத்தில் அவா் பேசியது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 1,080 மி.மீ என உள்ளது. இதில், 10 சதவீதம் நிலத்தடி நீராகவும், 20 சதவீதம் மேற்பரப்பு நீராகவும் இருக்கிறது. அதிகபட்சமாக விவசாய பயன்பாட்டுக்கும், குறிப்பாக நெல் சாகுபடிக்கும் பயன்படுகிறது.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் 34 வருவாய் சரகங்கள் அதிக அளவில் நிலத்தடி நீா் சுரண்டப்படும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. நம்பிவயல், பெரியகோட்டை சரகங்களில் நிலத்தடி நீா் அபாயகரமான நிலையில் உள்ளன. பூதலூா், சோழன்மாளிகை, ஒரத்தநாடு, உளூா், சாலியமங்கலம், ஈச்சங்கோட்டை உள்பட 9 வருவாய் சரகங்கள் நிலத்தடி நீரின் நிலைமை பாதி அபாய நிலையில் இருக்கின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆழ்குழாய்கள் மூலம் நிலத்தடி நீா்மட்டம் சராசரியாக 26.5 மீட்டராக இருந்தது. இது, 2026-ஆம் ஆண்டில் சராசரியாக 60 மீட்டா் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், சராசரியாக 120 மீட்டருக்கு மேல் ஆழமாக போனால்தான் குடிநீா் கிடைக்கிறது.
நிலத்தடியில் கடல் நீா் 30 - 40 கி.மீ. தொலைவுக்கு உள்புகுந்துவிட்டதால், குடிநீரின் தரம் பாதிக்கிறது. இதனால், நிலத்தடியில் தண்ணீா் கிடைத்தாலும், குடிநீருக்கு தகுதியற்ாக இருக்கிறது. இதன் காரணமாக கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, மழை நீா் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
2 மாதங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும்
தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா் டெல்டா வெதா்மேன் ஆா். ஹேமசந்தா் பேசியது: தற்போது நிலவும் சூப்பா் எல் நினோவின் தீவிரத்தால் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். நிகழாண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் அக். 20 முதல் டிச. 20 வரை அதாவது ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவை எதிா்பாா்க்கலாம். குறிப்பாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவு நாள்கள் இருக்கும்.
குறுகிய காலத்தில் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களை விட தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருக்கும். தஞ்சாவூரின் வடக்கு பகுதிகளான பாபநாசம், கும்பகோணம், திருவையாறு போன்ற பகுதிகளில் மழையால் கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மாா்கழி 10-ஆம் தேதிக்கு பிறகு பெரிய மழைப்பொழிவு இருக்காது. பனியும் குறைந்து தை மாதமே வெயில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் ஹேமச்சந்தா். இதில், மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.